பக்கம்:கால்டுவெல் ஒப்பிலக்கணம்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை

எண்ணிற் சிறந்ததுந் தமிழ்; எழுத்திற் சிறந்ததுந் தமிழ் ;
பண்ணிற் சிறந்ததுந் தமிழ் ; பாரிற் பரந்ததுந் தமிழ்;
மண்ணிற் பழையதுந் தமிழ்; மாசற் றொளிர்வதுந் தமிழ் ;
கண்ணிற் சிறந்ததுந் தமிழ் ; கன்னிமை சான்றதுந் தமிழ்!

“தேனினு மினியது தமிழ், தெவிட்டாச் சுவையது தமிழ்; இலக்கணஞ் சிறந்தது தமிழ், இயல்வளஞ் செறிந்தது தமிழ்; ஒப்புயர்வற்றது தமிழ், ஒண்கலை நிறைந்தது தமிழ்; தன்னேரிலாதது தமிழ், தனிப்புகழ் வாய்ந்தது தமிழ்” என்றெல்லாம் பாட்டாலும், உரையாலும் பலபடப் புகழ்ந்து மகிழும் பான்மையது உயர்தனிச் செம்மொழியாகிய நந் தமிழ் மொழி. எனினும், இச் சீரிய மொழியின் உயர்வுசிறப்புக்களைத் தமிழ்மக்கள் மட்டும் எடுத்துக்கூறிக் கொள்வது அத்துணைச் சிறப்பெய்துவிப்ப தாகாது. என்னை? உலகில் வழங்கும் மொழிகள் பலப்பல; அவ்வம் மொழிக்குரியார் தத்தம் மொழியே தலைசிறந்தது என்று கூறிக்கோடல் இயல்பேயாகலின். உலக மொழிகள் பலவற்றுள்ளும் சிறந்த மொழிகள் சிலவற்றைத் தேர்ந்து கொண்டு, அவற்றுடன் தமிழ்மொழியை ஒப்பிட்டுச் சீர்தூக்கி, எவ்வகையிலும் சிறந்தது தமிழ்மொழியே என்று முடிவு கூறின், யாவராலும் அஃது எளிதில் ஏற்றுக்கொள்ளப்பெறும். அதிலும் தமிழ்மொழிக் குரியரல்லரான வேறொரு செம்மொழியாளர் காய்தலுவத்தலின்றித் தேர்ந்து, ஆராய்ந்து, தெளிந்து அத்தகைய முடிபு கூறின் அதை விரைந்தேற்றுப் போற்றுதல் அனைவர்க்குங் கடனன்றோ?