பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

49


முறைகளைத் திருத்திக் கொண்டு, இன்னும் புதிய முறைகளைப் புகுத்திக் கொண்டால், சிறந்த இலக்குக் காவலராகப் பெயர் வாங்கலாம். புகழில் ஓங்கலாம்.

3. கடைக் காப்பாளர்கள் (Full-Backs)

நல்ல உயரமாகவும், சிறிது உடல் எடையில் கனமுள்ளவர்களாகவும்; அதே சமயத்தில் விரைவாக ஒடக்கூடிய ஆற்றலும் வல்லமையும் தேவைக் கேற்றவாறு இரண்டு கால்களாலும் பந்தை மாறி மாறி உதைத்தாடக் கூடிய திறமையும்; கால்களால் மட்டுமின்றி, தலையால், மார்பால், வயிற்றால் பந்தைத் தேக்கி நிறுத்துவதுடன், தலையாலேயே வருகின்ற பந்தை எதிர்த்தாடித் திருப்பி அனுப்புகின்ற சக்தியும்; ஏய்ப்பதற்காகவே பந்துடன் வரும் எதிர்க்குழு முன்னாட்டக்காரர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு, அவர்களிடம் ஏமாறாதவாறு, சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்கக்கூடிய சாமர்த்தியமும் நிறைந்தவர்களாகக் கடைக் காப்பாளர்கள் இருக்க வேண்டும்.

மற்ற ஆட்டக்காரர்களைப் போல, பார்வைக்கு ரம்யமாகவும், கவர்ச்சிகரமானதாகவும் இல்லாத இடத்தில் நின்று இவர்கள் ஆடினாலும், கடைக்காப்பாளர் பணி மிகவும் கடமை நிரம்பிய பணியாகும்.

இவர்கள் இயங்கிப் பணியாற்றுகின்ற இடப்பரப்பு சிறிதளவு என்பதால், இவர்கள் இலக்கைக் காக்கின்ற மிகப் பெரிய பொறுப்புடன், எதிரிகளின் நடமாட்டத்தை உன்னிப்பாக கவனித்தாடுகின்ற கண்ணோட்டத்திலும், கருத்தோட்டத்திலும், காரிய ஆக்கத்திலுமே மிகவும் குறிப்பாக இருந்து ஆட வேண்டும்; ஆடுகிறார்கள்.