பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா
87
 

பந்தை நிறுத்தியது போலவே, கால்களால் பந்தை உருட்டிக் கொண்டும், தள்ளிக் கொண்டும், விரைந்து ஒடும் ஆட்டம் மிகவும் சிறப்பானது. பந்துடன் ஒடிக் கொண்டிருக்கும் பொழுது, பாய்ந்து எதிரே வருகின்ற எதிர்க் குழுவினரின் காலில் படாது, பந்தை ஒதுக்கியும், மாற்றியும் தள்ளி, அத்துடன் அவர்களது தலைக்கு மேலே போகுமாறு பந்தை உதைத்துக் கொண்டு போகின்ற முயற்சியும், அதே முயற்சியில் பந்தை இலக்கை நோக்கி அடிக்கின்ற திறமையும், மிக எளிதில் வரக்கூடிய காரியமல்ல.

எதிரியின் ஒறுநிலைப் பரப்பிற்குள் பந்துடன் வந்துவிட்டு, எவ்வாறு பந்தை இலக்கிற்குள் உதைக்கலாம் என்று பல வீரர்கள், தட்டித்தடுமாறி, இலக்குக் காவலுக்கு நேராகவே பந்தைத் தந்துவிட்டு ஏமாந்து நிற்பதையும் நாம் கண்கூடாகக் கண்டிருக்கிறோம்!

அவ்வாறில்லாமல், மிக எளிதாக, அழகாக, முன்பாதங்களால் பந்தை எத்தி, இலக்குக் காவலன் கைகளுக்குச் சிக்காமல், எட்டாமல், பந்து இலக்கினுள் நுழைந்து வலையில் போய் மோதுகின்றவாறு ஆட, பயிற்சியுள்ளவர்களாலேயே முடியும்.

ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருந்து கொண்டு, இலக்கை நோக்கி உதைத்தால், இலக்குக் காவலனால் தடுக்கவே முடியாது. ஆகவே, அந்தக் கோணம் (Angle) எத்தனை டிகிரி என்பதையும் குறிப்பிட்டுக் கூறவும் முடியாது. அதை பூரணமாகக் கற்றுக் கொள்ள வேண்டுமானால், தினமும் பயிற்சி செய்வதை விட, வேறு வழியேயில்லை.