பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

x

என்ற செய்யுளை உடனே சொன்னார். 'அதிமதுரம் என்பது ஒரு காட்டுச் சரக்கு; அதை எதற்காக இப்படிப் போற்றி முழக்க வேண்டும்?' என்ற ஏளனம் செய்யுளில் எதிரொலித்தது.

கட்டியக்காரன் அவரைப் புலவர் என்று அறிந்து கொண்டான். அந்தச் செய்யுளையும் நடந்த சம்பவத்தையும் அதிமதுரத்திடம் சென்று சொன்னான். அவர் அதனைக் கேட்டதும், ஏளனம் செய்தவரைத் தலை குனிய வைக்க எண்ணினார். அவர் யாவரென அறிந்து வருமாறு அந்த ஏவலனைப் பணித்துவிட்டு, ராஜசபையை நோக்கிச் சென்றார்.

சூழ்ச்சிக்கு முனைதல்

அரசவையினை அடைந்த அதிமதுரம், வழியிடையே தாம் கண்ட புதிய கவிராயரையும், அவர் சொன்ன செருக்கான அந்தச் செய்யுளையும் தண்டிகைப் புலவர்கட்கும் அரசனுக்கும் மிக வருத்தத்தோடு எடுத்துச் சொன்னார். அவரை எப்படியும் அவமானப்படுத்தி அனுப்ப வேண்டும் என்றும் எச்சரிக்கை செய்தார்.

காளமேகத்தைப் பற்றி அறியச் சென்ற கட்டியக்காரன் அவைக்கு வந்தான். கவிராயரே தந்த ஒரு சீட்டுக் கவியினை அதிமதுரத்திடம் தந்து நின்றான்.அதனைப் படித்ததும் அதிமதுரம் மேலும் சினம் கொண்டார். அதனைப் படித்த அரசனும் அறிந்த பிறரும் அவ்வாறே ஆயினர்.

அவையில் வந்தனர்

'அந்தப் புலவரை உடனே இங்கு கொண்டு வருக. நம் அவைப்புலவர் பெருமானைப் பழித்த அவருக்குத் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். கட்டி இழுத்தாயினும் கொணர்க' என்று ஆணையிட்டுத் தன் ஏவலரைப் போக்கினான் திருமலைராயன்.

அவர்களும் காளமேகத்தை அணுகி அரசனின் ஆணையைக் கூற அவரும் நிகழ்ந்திருக்கும் குமுறலை எண்ணியவாறே அவர்களைத் தொடர்ந்தார்.

அரசவையிலே நுழைந்தார் காளமேகம். மன்னனை வாழ்த்தினார். தாம் கொண்டு வந்திருந்த எலுமிச்சம் பழத்தை அவனிடம் அளித்தார். அதனை வாங்கிய அவன், அவருக்கு இருக்கை அளித்து உபசரியாமல் வாளாயிருந்தான்.

காளமேகம் அதனைக் கண்டு சிரித்தார். அதிமதுரத்தின் சூழ்ச்சி வலையிலே அரசனும் சிக்கியிருந்த உண்மையைக் கண்டார். தமக்கு உதவும் தேவி அகிலாண்ட்வல்லி கோயில் கொண்டிருக்கும் திசையை நோக்கிக் கரங்குவித்து தியானித்தார். அதன்பின் தமக்கொரு இருக்கை அருளுமாறு கலைமகளை வேண்டிப் பாடினார்.