பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 75 பாரளக்குந் தூதுசெல்லும் பையரவின் மேனடிக்கும் சீரகலி சாபத்தைத் தீர்க்குமே-ஊரருகில் சண்டச் சகடுதைக்குந் தையலாய் கார்நீல கண்டத்தா ரூரான் கழல், (112) பெண்மணியே! கருநீல கண்டத்தையுடைய ஆரூரான் ஊர்ந்து செல்லுகின்ற ஆனேற்றின் பாதங்கள், மாவலி தந்த உலகை எல்லாம் அளக்கும்; பாண்டவர்க்காகத் தூது செல்லும்; படமுடைய பாம்பான காளிங்கனின் தலை மேலேயும் நடனமிடும்;அழகிய அகலிகையின் சாபத்தையும் போக்கும்; தன் ஊரின் அருகிலே பகைத்து வந்த சகடாசுரனையும் உதைத்துக் கொல்லும்; அத்தகைய சிறப்பினை உடையவை அவை. ‘மாயனே எருதாகிப் பெருமானைத் தாங்கிச் செல்பவன்' என்பது புராண மரபு. அதனை உளங்கொண்டு மாயனின் திருவிளையாடலை யெல்லாம் இப்படிக் கூறுகின்றார். ஆனின் திருவடிகளே இப்படிச் சிறந்தவையானால், அதனை ஏறிச் செலுத்துவோனின் பாதங்களை பற்றிச் சொல்லுதலும் வேண்டுமா? என்பது உட்கருத்தாகும். அதனை அடைவதே உய்திக்கு வழி என்பதும் முடிபாகும். வாயிற்படி ஆனாரிலையே திருவாரூர்த் தியாகேசப் பெருமான் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்காகப் பரவையாரிடத்தே தூது நடந்து சென்றனர். அந்தத் திருவருளைப் போற்ற நினைக்கிறார் கவிஞர். அடிமுடி தேடியும் காணாத மாலும் அயனும் அந்தப் பரவை வீட்டின் வாயிற்படிகளாக உருக்கொண்டு கிடந்திருந்தால், அவற்றைக் கண்டிருக்கலாம் அல்லவோ? என்று, அவர்களை நினைத்து இரங்குவது போலப் பாடுகிறார். ஆனா ரிலையே அயனும் திருமாலும் கானா ரடிமுடிமுன் காண்பதற்கு- மேனாள் இரவுதிரு வாரூரி லெந்தைபிரான் சென்ற பரவைதிரு வாயில் படி. (113) “பிரமனும் திருமாலும், முன்னாளிலே காட்டிடத்தே தோன்றிய சிவபெருமானது அடியையும் முடியையும் காண்பதற்கு முடியாமற் போயினார்களே! திருவாரூரிலே, ஓர் இரவிலே, எம் தந்தையாகிய அச் சிவபெருமான் தூது நடந்து சென்ற பரவைநாச்சியாரின் வீட்டுவாயிற்படிகளாக அவர்கள் ஆனார்கள் இல்லையே? அங்ங்னம் ஆகியிருந்தால் அவர்கள் கண்டிருப் பார்கள் அல்லவோ?’ என்பது குறிப்பு.