உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவல்துறை பற்றி கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186

காவல்துறை பற்றி

உரை : 9

நாள் : 25.03.1974

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, காவல்துறை, தீ அணைப்புத் துறை ஆகிய மானியங்கள் மீது நல்லபல கருத்துக்களை, ஆக்கபூர்வமாக வழங்கியுள்ள மாண்புமிகு உறுப்பினர்களுக்கும், அனைத்துக் கட்சிகளினுடைய தலைவர்களுக்கும் என்னுடைய நன்றியை முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த மானிய விவாதத்தைத் தொடங்கிவைத்த மாண்புமிகு திரு. கே. டி. கே. தங்கமணி அவர்கள் 'பர்பாமன்ஸ் பட்ஜெட்' என்ற முறை இந்த மானியத்திற்கும் கடைப்பிடிக்க வேண்டுமென்று சுட்டிக்காட்டினார்கள்.

வளர்ச்சித் துறைகளுக்கு மாத்திரம்தான் அதுபோன்ற பட்ஜெட் வகுக்கின்ற முறையை நாம் இதுவரையில் கையாண்டு வந்திருக்கிறோம் என்பதையும், வளர்ச்சித் துறை அல்லாத வேறு மானியங்கள், வேறு துறைகளுக்கு இதுவரை அத்தகைய முறையில் பட்ஜெட் அமைக்கவில்லை என்பதையும், வளர்ச்சிதுறை அல்லாத வேறு துறைகளுக்கும் அந்தவகையில் பட்ஜெட் அமைக்க முடியுமா என்பதைப்பற்றி யோசிக்க, துறையினர்களை நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் என்பதையும் அவர்களுடைய முறையீட்டுக்கு நான் என்னுடைய விளக்கமாகக் குறிப்பிடக் கடமைப்பட்டிருக்கிறேன்.

பேசிய அனைத்துக்கட்சியினுடைய தலைவர்களும், மாண்புமிகு உறுப்பினர்களும் தமிழ்நாடு காவல்துறையின் திறமையை வெகுவாகப் பாராட்டிப் பேசினார்கள். நண்பர் ஹாண்டே அவர்கள் பேசும்போது, 'போலீஸ் துறையில் தவறுகள் வந்தால் போலீசைக் காட்டிக்கொடுக்கிறீர்கள். போலீஸ் மீது அந்தத் தவறுகள் போய்ச் செல்லட்டும் என்று ஒதுங்கிக்கொள்கிறீர்கள்.