உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

காவிரிப் பிரச்சினை மீது

இலக்கியங்களில் எல்லாம் காவிரியைப் பற்றி வருணித்திருக்கிறார்கள். அது சம்பந்தப்பட்ட வரலாறுகளை எல்லாம் உறுப்பினர்கள் சொன்னார்கள். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்.

"மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ வாடை யதுபோர்த்துக்

கருங் கயற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி” என்று அழகுறப் பாடிக் காட்டினார்கள். மைசூர் அரசு இந்த அணைகளைக் கட்டிவிட்டால் அங்கே மருங்கு வண்டு சிறந்தார்ப்பதைப் பார்க்க முடியாது. மணிப்பூ வாடையை நுகர முடியாது.

கிழக்கு பாகிஸ்தான் அகதிகளைக் காப்பாற்ற வேண்டு மென்று திருமதி. இந்திரா காந்தி அம்மையார் உலக நாடுகளை எல்லாம் உதவி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நாமோ நாளைக்கு அகதிகளாக மாறிவிடக்கூடிய தமிழ்நாட்டு மக்களை ஆபத்தில் இருந்து காக்க உங்கள் உதவியைத் தாருங்கள் என்று அந்த அம்மையாரைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இது உணர்ச்சியை அம்மையார் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆளும் கட்சியின் சார்பில் பேசிய திரு. கோவை செழியன், திரு. கணபதி அவர்கள் சொன்னார்கள். "நாம் தற்கொலைப் படையாக இருப்பதற்கும் தயாராய் இருக்கிறோம். எந்த யுத்தத்திற்கும் தயாராய் இருக்கிறோம்" என்றார்கள். அப்படி ஒரு முடிவுக்கு வந்து விட்டால் இதுபோல சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் போடவேண்டிய அவசியம் இல்லை. அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டிப் பேச வேண்டியதில்லை. அவை அவர்களுடைய உள் உணர்ச்சிக்கு அடையாளமான வார்த்தைகளே தவிர வேறு ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன். எதிர்கால தமிழகத்தை எண்ணிப்பார்த்து கவலையால் குமைந்த உள்ளத்தில் பிறந்த நல்முத்துக்கள் என்ற அளவில் அவைகளை நான் எண்ணுகின்றேனே அல்லாமல் இந்த உணர்ச்சிகள் மத்திய அரசின் மீது பகைமையோ, அண்டை மாநில அரசின் மீது பகைமையோ ஆகத் திருப்பப்படும் என்று பொருள் இல்லை. பேசிய உறுப்பினர்களே அப்படி நினைத்துப் பேசியிருக்கமாட்டார்கள்.