உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

காவிரிப் பிரச்சினை மீது

இந்தியாவினுடைய ஒற்றுமைக்கு ஊறு இழைப்பதாக அமைந்து விடக்கூடாது" என்று ஆனால் அதே நேரத்திலே நமது உள்ளத்திலே கேள்வி எழாமல் இல்லை, பாரதியார் பாட்டு நம்முடைய நினைவிற்கு வராமல் இல்லை 'கண்களை விற்று சித்திரம் வாங்குவதோ' என்று பாரதியார் கேட்டார். தமிழகத்தை அழித்துவிட்டு இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதா என்று கேள்வியைத்தான் நான் கேட்க வேண்டியவனாக இருக்கின்றேன். இப்படிக் கேட்பதால் இந்திய ஒருமைப்பாடு ஒழிக்கப்படும் என்ற எண்ணத்திலே நான் சொல்லவில்லை. மத்திய அரசிலே இருக்கிறவர்கள் இதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். தமிழகம் ஒழிந்து அதன் வாயிலாக இந்திய ஒருமைப்பாடு கட்டிக்காக்கப் படவேண்டும் என்றால், அதற்குப் பெயர் ஒருமைப்பாடா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என்றுதான் நான் கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் காரணத்தால் இன்றைக்கு இந்தப் பிரச்சினை ஒத்திவைக்கப்படுகிறது, நடுவர் தீர்ப்புக்கு விடுவதற்கு அஞ்சுகிறார்கள் என்றெல்லாம் சொல்லப்பட்டது. எதிர்க் கட்சித் தலைவர் அவர்களே கூட இதுபற்றிச் சொன்னார்கள். நேற்று பேரவையிலே பேசுகிறபோதும் குறிப்பிட்டேன். மிகப் பயங்கரமான முடிவுகள் எதிர்பார்க்கப்பட்ட நேரம். பொதுத் தேர்தல் நாடாளுமன்றத்திற்கு இந்தியாவிலே எல்லா மாநிலங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை, அந்த நேரத்திலே பெங்களூரிலே பேசிய இந்தியாவின் தலைமை அமைச்சர் திருமதி. இந்திரா காந்தி அவர்கள் காவிரி நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை நடுவர் தீர்ப்புக்கு விடப்படும் என்று பட்டவர்த்தனமாகச் சொன்னார்கள். அப்படிச் சொன்ன பிறகும் மைசூரிலே நாடளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலிலே எல்லா இடங்களையும் அவருடைய கட்சிதான் பெற்றிருக்கிறது. ஆக இதிலிருந்து நியாயத்தைப் பேசினால், மைசூர் மக்கள் ஒழுங்காக வாக்களிப்பார்கள் என்று தெரிகிறது. ஆகவே நியாயமாக இந்தப் பிரச்சினையை நடுவர் தீர்ப்புக்கு விட்டால் மறுபடியும் அவர்களுடைய கட்சிக்கு மைசூர் மாநிலத்தில் நல்ல வெற்றி கிடைக்கும் என்று நான் அவர்களுக்கு இந்த நேரத்திலே சிபாரிசு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். மைசூர் மக்களிடத்திலே யாரும்