பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

9


ஏற்றுக்கொண்டிருக்கலாம் என்றும், இதனால், பிரான்சு தேசமே கிரிக்கெட் ஆட்டத்தின் பிறப்பிடம் என்று கருத இடமுண்டு என்று கூறுவோருக்கு, ஆதாரப் பூர்வமாக வேறுபல சான்றுகளைக் காட்டி மறுப்புரை பகர்வோரும் நிறைய பேர்கள் இருக்கின்றார்கள்.

இங்கிலாந்து என்பாரும் உண்டு

பிரான்சு நாட்டில் கிரிக்கெட் பிறந்தது, பிரபலமாக இருந்தது என்ற அடிப்படை கருத்தையே தகர்ப்பதுபோல, இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆட்டம் சிறந்ததொரு இடத்தைப் பெற்று, மக்கள் மத்தியிலே பவனிவந்த நேரத்தில், பிரான்சு நாட்டினர் கிரிக்கெட் பற்றியே தெரிந்திருக்கவில்லை என்று கூறி ஓரு சாரார் மறுப்பினைத் தொடங்குகின்றனர்.

கி.பி.1478ம் ஆண்டுவரை, கிராகெட் என்ற சொல் பிரெஞ்சு மொழியில் தோற்றமடையவோ, இடம்பெறவோ இல்லை என்றும், 1478ம் ஆண்டுக்குப் பிறகே இங்கிலாந்தில் ஆடப்பெற்றுவந்த இந்த ஆட்டம் பற்றி விளக்குவதாக இந்த கிராகெட் எனும் சொல் பிரெஞ்சு மொழியில் தோன்றியிருக்க வேண்டும் என்றும் சில சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

மேற்கூறிய கருத்தினை மிகவும் வலியுறுத்திக் கூறுகின்ற சரித்திர ஆசிரியர்கள், இங்கிலாந்தில் எப்பொழுது கிரிக்கெட் ஆட்டம் தோன்றியது. எங்கே தோன்றியது என்பதைத் திட்டவட்டமாகக் குறிப்பிட இயலாது திண்டாடிப் போகின்றார்கள். ஆனாலும் இலைமறைகாய்களைப் போன்று இங்குமங்குமாக ஒரு சில குறிப்புக்கள் வரலாற்றுப் பின்னணியிலே ஆங்காங்கு மறைந்து கிடப்பதை சுட்டிக் காட்டி. இப்படியும் இருக்கலாம் என்கின்ற தங்களது குறிப்பினையும் கூறிக்கொண்டிருக்கின்றனர்.