பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


மலர்களும் மாலையும்

கிரிக்கெட் ஆட்டமானது யாராலும் கண்டுபிடிக்கப்படவில்லை. சிறுதுளி பெருவெள்ளமாக உருவெடுப்பது போல, பல மலர்கள் சேர்ந்து மாலையாவதுபோல, பல விளையாட்டு நிகழ்ச்சிகள் ஒன்று சேர்ந்து, இவ்வாறு ஒரு சிறப்பான ஆட்டமாக உருவெடுத்து இருக்கிறது என்பதுதான் கிரிக்கெட் ஆட்டத்தின் பிறப்பினைப் பற்றிக் கூறும் விளக்கமாகும். மலை உச்சியிலிருந்து கீழே உருளத் தொடங்கிடும் ஒரு சிறு பனிக்கட்டி, கீழே உருண்டு வரும் பொழுதே பனித்துகள்களின் மீது படிந்து படிந்து தன்னைப் பெரிதாக்கிக் கொண்டு, கீழே விழும் பொழுது பெரிய பனிக்குன்றாக விழும் என்று காவியம் ஒன்று உருவாவதை விளக்குவதற்கு உதாரணமாகக் கூறுவார்கள். சிறுகதையாகத் தோன்றிய ஒரு கதை, பலரது வாயில் புகுந்து, கற்பனையில் மிதந்து விளக்கமாக வெளியேறும்பொழுது, நிகழ்ச்சிகளில் பெருகி பெருங்கதையாக, காவியமாக மாறும் என்பது போலவே, கிரிக்கெட் ஆட்டமும் சிறு ஆட்டமாக அதுவும் பொழுது போக்கு ஆட்டமாகத் தோன்றி வளர்ந்து வளர்ந்து, இன்று உலகப் புகழ்பெற்ற ஆட்டமாக விளங்கியிருக்கிறது என்றும் கூறுவார்கள்.

அப்படியானால் சிறுதுளி போல, நறுமலர்போல, உருளத் தொடங்கும் சிறு பனிகட்டி போல, மூலம் ஒன்று கிரிக்கெட் ஆட்டத்திற்கும் இருந்திருக்க வேண்டும். அந்த மூலம் எதுவாக இருந்திருக்க வேண்டும் என்பதைக் கண்டு பிடிக்கவும் பல ஆராய்ச்சியாளர்கள் முயன்றிருக்கிறார்கள்.

மூலமும் காலமும்

கிளப் பால் (Club Ball) என்பதாக ஒரு ஆட்டம் இங்கிலாந்தில் முன்னாளில் ஆடப்பட்ட ஒரு ஆட்டமாகும்.