பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிரிக்கெட் ஆட்டத்தின் கதை

23


விதிகளுக்கு மேலாக கிரிக்கெட் ஆட்டத்தை விளையாடியவர்கள், வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் எண்ணினார்கள், மதித்தார்கள். ஆகவே சூதாடுவதுபோல பணம் பந்தயங்கட்டுவதையம், இந்த சட்டத்திற்கு மாறானதுதான் என்பதையும் தவிர்த்துவிட்டு, கிரிக்கெட் ஆட்டத்தின் லயிப்பிலும் ரசிப்பிலும் முன்னோக்கிச் சென்றனர்.

ஆட்டத்திற்கிடையே பந்தயத்தில் தோற்றவர்கள், பணத்தை இழந்தவர்கள் பலர் சேர்ந்து கலவரம் செய்கின்ற கூட்டத்தைப்பற்றி முடிவெடுக்க முனைந்த நீதிபதிகள்கூட. அவர்களிடையே அலசி ஆராய்ந்து, பெருந்தன்மையின் பெயரில் விட்டுவிடுவதாகவே முடிவு செய்தனர் என்றால், ஆட்டத்தின் மேன்மையான வளர்ச்சிக்கு வேறு ஆதாரம் என்னதான் வேண்டும்.?

அரச குடும்பத்தினரும் கிரிக்கெட் ஆட்டத்தில் மனம் ஈடுபட்டு இலயித்து ஆடியதுடன், அரிய பொழுதுபோக்கு ஆட்டமாகவும் இதனை ஏற்றுக்கொண்டிருந்தனர்.

செயிண்ட் அல்பன்ஸ் என்னும் இடத்தில் 1666ம் ஆண்டு நடந்த நிகழ்ச்சியானது, அரசவையினரும் அரசரும் கிரிக்கெட் ஆட்டத்தில் மெய்மறந்து ஈடுபட்டிருந்ததற்கு மெய்யான சான்றாக விளங்குகிறது. இலண்டனிலே பெருத்த தீவிபத்தொன்று நேர்ந்தபொழுது, இரண்டாம் சார்லஸ் மன்னரும், அவரது குடும்பமும் மற்றும் அரசவையாளரும் தப்புவதற்காக இலண்டனைவிட்டுக் கட்டாயமாக வெளியேறும் நிலைக்கு ஆளானார்கள். அப்பொழுது அவர்கள் செயிண்ட் அல்பன்ஸ் (St. ALBANS) என்ற இடத்தில் வந்து தங்க நேர்ந்தது. அங்கு வாழ்ந்த மக்கள் அவர்களுக்கு கிரிக்கெட் ஆட்டத்தை ஆடிக்காட்ட, அவர்கள் தங்கள் துயர நிலையையும் மறந்து சந்தோஷம், அடைந்த தாகவும் வரலாற்றுக் குறிப்பொன்று கூறுகிறது.