பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


வல்லுநர்களைக் கலக்கித் தெளியவைத்து, நல்லதொரு முடிவினை எடுக்க வைத்தது என்ற வரலாற்றுக் குறிப்புக்களைப் படிக்கும் போது, ஒரு பெரும் திகில் மிக்கக் கதை ஒன்றைப் படிப்பது போன்ற உணர்வினை நாம் பெறுகிறோம். கிரிக்கெட் ஆட்டம் மெல்ல மெல்ல வளர்ந்து வரத் தொடங்கிய நாட்களில், பந்தடிக்கும் ஆட்டக்காரருக்கு எதிராகப் பந்தெறியும் ஆட்டக்காரர்கள், கீழாக கையைக் கொண்டு சென்று உருட்டுவது போல பந்தை எறிந்தார்கள். (Under Arm Bowling) விக்கெட்டுகள் புல் தரையில் ஊன்றி வைக்கப்பட்டிருந்த போது, பந்து புல்லில் பட்டு பலவாறு பல பக்கமாகத் திரும்பி விரைந்து செல்லும் போது, (Turn) வளைந்த தடியை மட்டையாகக் கொண்டு அடித்தாடத் தடுமாறிய காலமாக, ஆரம்ப கால ஆட்ட முறை அமைந்திருந்தது.

விக்கெட்டுகள் திருத்தமுற அமைக்கப் பெற்று, சீராக மாறியபோது, கீழாக எறிந்து ஆடிய எறிமுறை பலனளிக்கவில்லை. மாறாக, அடித்தாடும் ஆட்டக்காரருக்கு விரைந்து அடித்தாடி ஒட்டம் எடுக்க அது லாவகமாக அமைந்து விட்டிருந்தது. அதனால், பந்தெறியும் முறையில் புதுமையாக மாற்றம் இருந்தால் தான், அடித்தாடுவோரை ஆட்டமிழக்கச் செய்யமுடியும் என்ற அவசியமும் கட்டாயமும் அவர்களுக்கு ஏற்பட்டது. கீழாக எறிவதற்குப் பதிலாக, கையை வளைத்து வட்டமிட்டு எறியும் எறி முறை (Round arm Bowling) 1807ம் ஆண்டு புதிதாக ஒன்று தோன்றியது. அதைத் தொடங்கி வைத்தவர் இங்கிலாந்து நாட்டிலுள்ள கென்ட் மாகாணத்தைச் சேர்ந்த ஜான் வில்லிஸ். (John Willies)