உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கிருஸ்தவத் தமிழ்த் தொண்டர்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. எல்லீசர்

ஆங்கில நாட்டிலே தோன்றினார் எல்லீசர் என்னும் நல்லறிஞர் ; இந்திய துரைத்தனத்திற்குரிய கலைகளைக் கற்றுத் தேறினார். அவர் சிறந்த மதிநலம் வாய்ந்தவர் : எப்பொருளையும் ஆராய்ந்து மெய்ப்பொருள் காணும் மேதை.

அரசியலாளர் அவரைச் சென்னை [1]நிலவரி மன்றத்தின் செயலாளராக முதலில் நியமித்தனர்; எட்டாண்டுகள் அவர் அம்மன்றத்தில் சிறந்த பணி புரிந்தார் ; அக்காலத்தில் தென்னாட்டுக் [2]காணியாட்சி முறைகளைக் கருத்தூன்றிக் கற்றார்; காணியாளருடைய கடமையையும் உரிமையையும் தெள்ளத் தெளியச் சென்னை அரசியலாளருக்கு உணர்த்தினார். மிராசு முறையைக் குறித்து அவர் எழுதிய நூல் இன்றும் ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றது.

பின்னர், பத்தாண்டுகள் எல்லீசர் சென்னைக் கலெக்டராக இருந்தார் ; அப்போது இந்திய நாட்டு மொழிகளைக் கற்றுணர ஆசைப்பட்டார் ; நல்லாசிரியர்களின் உதவி பெற்று வடமொழியும் தென்மொழியும் வருந்திக் கற்றார். தென்னாட்டில் வழங்கும் மொழிகளுள் தமிழ் மொழியின் செம்மையும் தொன்மையும் அவர் உள்ளத்தைக் கவர்ந்தன ; சென்னையில் சிறந்த தமிழ்ப் புலவர்களாக விளங்கிய சாமிநாத பிள்ளை, இராமச்சந்திரன்


  1. நிலவரி மன்றம்—Board of Revenue.
  2. காணியாட்சி–Land Tenure.