பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
49

இப்போது நம் மனக்கண்ணுக்குக் கொணர விரும்பினால், பாதிரிமார்கள் அணிந்திருக்கும் தோற்றத்தை நம் நினைவிற்குக் கொணரின் நன்கு அறிந்துகொள்ளலாம். மாதர்களின் உடையும் நீண்ட அங்கியே ஆகும். என்றாலும், மாதர் அங்கி நீண்டும், ஆண்கள் அங்கி சிறிது குறைந்தும், முழங்கால் அளவுக்குத் தொங்கக் கூடியதாகவும் இருக்கும். குளிர் காலத்தில் வெம்மை தரும் பொருட்டு அங்கிக்கு மேல் ஒரு மேற் சட்டையை அணிந்து கொள்வர். அது சிறிது கனத்த ஆடையாக இருக்கும். இதைக் கோடை காலத்திலும் மேற்சட்டையாக அணிந்து கொள்வர். இதனால் யாதொரு துன்பமும் கொள்ளமாட்டார்கள். தொழிலாளிகள் தம் தொழில் முறைக்கேற்ற ஆடைகளை அணிந்து கொள்வர். மிதியடி அணிந்துகொள்ளும் வழக்கம் அவர்களிடையே இருந்தது. அம்மிதியடிகள் பல்வேறு திறத்தனவாக இருந்தன. தலையணியாகிய தொப்பியை அவர்கள் வெளியூர்ப் பயணமாகச் சென்ற பொழுதுதான் அணிந்து வந்தனர். கிரேக்கர்கள் தம் உடலை மறைத்து ஆடையால் மூடிக்கொண்டுதான் இருக்க வேண்டும் என்னும் கட்டிாயமுடையவர்களல்லர். அவர்கள் தம் உடலில் சட்டையின்றி இருக்கச் சிறிதும் கவலைப் படுவதில்லை. இப்படிப்பட்டவர்கள் விளையாட்டிலும் உடற்பயிற்சி செய்யுங் காலத்திலும் எப்படி இருந்திருப்பர் என்று கூறவும் வேண்டுமோ? அக் காலங்களில் தம் ஆடைகளை அகற்றி விடுவர்.


1218–4