பக்கம்:கிரேக்க நாட்டுப் பழமைப் பண்புகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3


அக்கேயர்களின் குண நலன்கள்

அக்கேயர்கள் சிறிதும் சோம்பி இராதவர் ; எப்பொழுதும் சுறுசுறுப்பாய் உள்ளவர்; ‘திரை கடலோடியும் திரவியம் தேடு’ என்னும் பழமொழிக்கிணங்கக் கலம் ஏறிக் கடற்பயணம் புரிபவர் ; புது நாடு கண்டு வீரதீரச் செயல்களை வெளிப்படுத்த வேண்டுமென்னும் உணர்ச்சிமிக்கவர்; எவ்வாறேனும் வெளி நாடுகளுக்குச்சென்று வாணிகம் செய்து பொருட்குவை திரட்டித் தம் நாட்டை வளப்படுத்த வேண்டுமென்னும் சீரிய நோக்கினர்.

செல்வம் ஈட்டுதற்குரிய பல்வேறு வழிகளில் வாணிகமும் ஒன்று. அவ்வாணிகத்தைக் கடல் கடந்து நடத்திப் பொருள் ஈட்டுதல் நம் தமிழரது மரபும் ஆகும். சாதுவன் என்பவன் நம் நாட்டு வணிகன். அவன் தன் முன்னோர் பொருள்களை இழந்தான்; இழந்த பொருள்களை மீண்டும் ஈட்ட விழைந்தான். அதன் பொருட்டுக் கலம் ஏறிக் கடல் கடந்து சென்றான் என்னும் வரலாற்றை மணிமேகலை என்னும் மாண்புறு நூல்

“வங்கம் போகும் வணிகர் தம்முடன்
தங்கா வேட்கையில் தானும் செல்வழி”

என்று குறிப்பிடுகிறது.

இவ்வாறே புனிதவதியாரின் கொழுநனான பரமதத்தனும் பொருளீட்ட மரக்கலம் ஏறி மாக் கடல் கடந்து சென்றான் என்பதை அருண்மொழித் தேவரும் அறிவிக்கின்றார்.