பக்கம்:குதிரைச் சவாரி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டையும் கூர்ந்து கவனித்தான். குதிரைகள் நெருங்க நெருங்க அவன் மனத்திலிருந்த பாரம் குறைந்து கொண்டே வந்தது. காரணம்? அந்தக் குதிரைகள் இரண்டும் புதியவை அல்ல, பழைய குதிரைகளேதாம் ! அன்று, மோஹனை ஏமாற்றிவிட்டு ஒடிப்போன அதே குதிரைகள் தாம் : இதை அறிந்ததும் மோஹனுக்குச் சொல்ல முடியாத ஆனந்தம் உண்டாயிற்று.

‘சரி, முனுசாமி எப்படியோ குதிரைகளைக் கண்டு பிடித்துவிட்டான். இனிமேல் பயமில்லை. அப்பாவிடம் இனி அவன் பணம் கேட்கமாட்டான்’ என்று ஆறுதல் அடைந்தான்.

ஆனல், திடீரென்று திரும்பவும் ஒர் எண்ணம் தோன்றியது.

‘ஆமாம், குதிரைகளை முனுசாமி எப்படிக் கண்டு பிடித்தானோ! எவ்வளவு கஷ்டப்பட்டு அவற்றைப் பிடித்து வந்தானோ : இப்போது என்னைக் கண்டால் அவன் என்ன பண்ணுவானோ : கோபம் கொண்டு சண்டைக்கு வந்து விட்டால் என்ன செய்வது ? குதிரைகளைத் தேடிப் பிடிக்க அவன் எவ்வளவு செலவு செய்தானோ அதையாவது கேட்கத்தானே செய்வான் ?’ என்றெல்லாம் நினைத்துக் கொண்டே நடக்கும்போது,

“மோஹன், நீயும் இந்த மாதிரி குதிரைச் சவாரி செய்ய வேண்டாமா ? உனக்கு ஆசையாக இல்லை ?” என்று கேட்டார் அப்பா.

“ஆமாப்பா, ஆசையிருந்தால் சும்மா சவாரி செய்ய முடியுமா? காசு கொடுத்தால்தான் சவாரி பண்ணலாமாம். அந்தக் குதிரைக்காரன் இருபதுகாசு கொடுத்தால்தான் குதிரை மேலே ஏற்றிவிடுவான். இல்லாவிட்டால் நம்மைத் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டான், அப்பா.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குதிரைச்_சவாரி.pdf/26&oldid=496035" இலிருந்து மீள்விக்கப்பட்டது