பக்கம்:குதிரைச் சவாரி.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வந்தான். வந்து கையைப் பிடித்தான். அப்போது மோஹனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கால்களெல்லாம் அவனை அறியாமலே ஆடின.

“என்ன மோஹன், உனக்கு இந்தக் குதிரைக்காரரைத் தெரியுமா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் மோஹனின் அப்பா.

“என்னை மட்டும்தானா இந்தத் தம்பிக்குத் தெரியும் ! என்னைத் தெரியும்; என் குதிரைகளைத் தெரியும்; என் வீடு கூடத் தெரியுமே!” என்றான் முனுசாமி.

“அட, அப்படியா விஷயம்! மோஹன் என்னிடம் இதெல்லாம் சொல்லவே இல்லையே!” என்றார் அப்பா.

அப்போது முனுசாமி மோஹனைப் பார்த்து, “தம்பி, ஏழெட்டு நாளாக இந்தப் பக்கம் உன்னேக் காணவே காணோமே! எங்கே போயிருக்தாய்?... அது சரி, போன வெள்ளிக்கிழமை குதிரைகளை இங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டு நீ போய்விட்டாயே! திரும்பி வருவாய், வருவாயென்று எதிர்பார்த்தேன், வரவேயில்லையே ?” என்றான்.

மோஹனுக்குத் தைரியம் பிறந்துவிட்டது. ‘சரி, இனி மேல் உள்ளதைச் சொல்லிவிட்டால்தான் நல்லது’ என்று எண்ணினான்.

நான் குதிரைகளை இங்கே கொண்டுவந்து விட வில்லையே! வழியிலேயே விட்டுவிட்டேன்."

“வழியிலேயே விட்டுவிட்டாயா! என்ன தம்பி, நீ சொல்வது புரியவே இல்லையே!” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் முனுசாமி. அப்பாவுக்கு இது ஒரு பெரிய புதிராக இருந்தது.

உடனே, மோஹன் நடந்தவற்றையெல்லாம் முதலிலிருந்து கூறினான். கேட்கக் கேட்க அப்பாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. முனுசாமிக்குச் சிரிப்பு வந்தது.

மோஹன் கதையை முடித்ததும் முனுசாமி உரக்கச் சிரித்துவிட்டான்.