பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தோல்விகள்; நேற்றும் சாதிச்சண்டைகள், இன்றும் சாதிச்சண்டைகள்; அப்படியானால் இரண்டாயிரம் ஆண்டுக்காலமாக என்ன நடை பெற்றிருக்கிறது? தனிமனித நிலையிலும் சமுதாயப் பொது நிலையிலும் அனுபவித்த வறுமை முதலிய கொடிய துன்பங்கள் மாற்றப்படவில்லை. ஆதலால், அறிவின் இயக்கம் இல்லை என்பது தானே பொருள். அறிவு என்பது அகராதிக்கு மறுபதிப்பன்று. புத்தகங்களில் உள்ள செய்திகளை ஒலிப்பதிவுத் தட்டுப்போலப் பதிவு செய்து திருப்பித்தருதலன்று. அறிவு, நுண்மையதாக உணர்விற்கலந்து வாழ்க்கையின் துறைதோறும் துணை நிற்பதாகும்.


"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்”

(140)

என்று கூறுகிறது. ஆதலால் கற்றவர்களில், கல்லாதவர்களும் அறிவிலிகளும் உள்ளனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதனுக்குக் கல்வியை இயக்கமாக்கித் தந்த பெருமை திருக்குறளுக்கு உண்டு. திருக்குறள் "கற்க" என்று விதிக்கிறது. வள்ளுவம் மிக மிக இன்றியமையாத இடங்களில் தான் இவ்வாறு விதிக்கிறது. அவற்றுள் "கற்க" என்பதும் ஒன்று; எத்தகைய நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்கவேண்டும்? உடல் நோய்க்கு உரிய மருந்தைத் தேடுதல் போல, உயிர்க்குற்றம் அல்லது மனக்குற்றத்திற்கு மருந்தென விளங்கக்கூடிய நூல்களைத் தேர்ந்தெடுத்துக் கற்கவேண்டும். மனக்குற்றங்கள் கருத்துக்களால்தான் மாறும். ஒவ்வொருவரும் தம்தம் மனக்குற்றம் இன்னதென அறிந்து அக்குற்றம் நீங்குகிறவரை கற்கவேண்டும்; குற்றம் நீங்கி, நன்னெறி வாழ்க்கைக்கு வந்தபிறகு அந்நிலையில் மீண்டும் சோர்வுபடாமல் நிலைநிற்க வேண்டும்.

"கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக"

(391)