பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 111


உழைத்தால் மட்டும் போதாது; குறைந்த சக்தியில் நிறைந்த பணிகளைச் செய்து முடிக்கும் திறனைப்பெற வேண்டும். அப்பணியின் பயன்பாட்டினைப் பெருக்கி வளர்க்க வேண்டும். சிலர் விடிய விடிய மாய்ந்துமாய்ந்து வேலை செய்வர். ஒட்டு மொத்தத்தில் அந்தப் பணியின் பயன் என்ன என்று கணக்கிட்டால் வட்டங்கள் தான் கிடைக்கும். ஏன்? உழைப் பாற்றலோடு அறிவை இணைப்பதில்லை. இன்னதை, இப்படி, இவ்வளவு ஆற்றல் செலவழித்துச் செய்தால் இவ்வளவு பயன் விளையும் என்ற அறிவேயிருப்பதில்லை. நம்முடைய நாட்டுத் திட்டங்களே எண்ணியபடி இலட்சியத்தை நிறைவேற்றித் தரவில்லை என்றால் நம்முடைய சமுதாயத்தில் உழைப்புக்கும், அறிவுக்கும் தொடர்பில்லாமல் நீண்ட இடைவெளி கிடப்பதை அறிக. அதனால் வள்ளுவம் அறிவையும் உழைப்பாற்றலையும் ஒருங்கிணைத்துத் தொழிற்படக் கற்றுக்கொடுக்கிறது.

"பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி" (618)
"ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
நீள்வினையால் நீளும் குடி" (1022)

என்ற அறிவறிந்த ஆள்வினை வழி நமது வாழ்வியல் சிறப்பதாக!

அன்பு

மனித உலகத்தை இணைத்து வாழச் செய்யும் அற்புதசக்தி அன்புக்கே உண்டு. விண்ணையும், மண்ணையும் இணைக்கும் பேராற்றல் அன்புக்கே உண்டு. உலகத்தின் குற்றங்குறைகளை, கொடுமைகளைக் கழுவித் தூய்மை செய்யும் ஆற்றல் அன்புக்கே உண்டு. அப்பரடிகள் ஆற்றல் மிக்க அன்பு என்று பாராட்டுவார். திருமூலர் அன்பே சிவம்' என்று பாராட்டுவார். அம்மம்ம! இந்த அன்பிற்குத்தான்