பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 115


ஒழுக்கக் கட்டுக்கோப்பு

மனித வாழ்க்கையை முறையாக வளப்படுத்தி வளர்ப்பது ஒழுக்கம். ஒழுக்கம் என்பது மருந்துமன்று; பத்தியமுமன்று. ஒழுக்கம் வாழ்வாங்கு வாழும் பாங்குடையவர்க்கு எளிதாக இனிதாக அமைவதேயாகும். மனிதன் பெற்றுக்கொண்ட, வளர்த்துக்கொண்ட அறிவு, ஆள்வினையாற்றல், அன்பு முதலியன சிதறிச் சிறு நெறிகளில் சென்று வீணாகாமல் தடுத்து நிறுத்தி அவனை அக நிலையில் வளர்த்துப் புறநிலையில் உயர்த்திச் சிறப்பிப்பது ஒழுக்கமேயாம். ஒழுக்கம் என்பது ஓர் உயர்நெறிச் சொல். அதற்குப் பல்வேறு பொருள்கள் உண்டு. இன்று ஒழுக்கம் என்ற சொல் அங்ஙனம் பல்வேறு பொருள்களை உணர்த்தாமல், ஒன்றையே குறிக்கும் சொல்லாகப் பெரும்பாலும் வழங்கப் பெறுகிறது. மனிதன் செய்யும் முயற்சிகள் அனைத்திலும், மற்றவர்களோடு பழகும் வாயில்களிலும் ஒழுக்கம் சிறப்புறுதல் வேண்டும். மனிதனின் புலன்கள் - பொறிகள் அனைத்தின் வாயிலாகவும் ஒழுக்கம் சிறப்புற்று விளங்க வேண்டும். காலம் போற்றுதலிலிருந்து கடமையை முறையாகச் செய்வது வரையில் ஒழுக்கநெறிக் கால்கள் பரவியுள்ளன. கண்கள், களங்கமுள்ள காட்சியை நோக்கக் கூடாது; எரிப்பான பார்வை எப்போதும் கூடாது. செவிகள், கோளும் தீக்குறளும் கேட்டல் கூடாது. முக்கு, முல்லை மலர்கள் மணமன்றிய சூரணங்களின் நெடியை முகரக்கூடாது. வாய், பல தவறுகளைச் செய்யும்; புறங்கூறும். பொய்புகலும், பயனில பேசும். வள்ளுவம் இவையனைத்தும் கூடாது என்று எதிர்மறை முகத்தால் மறுக்கிறது. பின் மனத்தால் - உள்ளத்தால் நெகிழக்கூடிய ஒழுக்கக்கேடு களையும் உணர்த்திக் காட்டுகிறது. அழுக்காறு! அம்மம்ம! ஒழுக்கக்கேடுகளுள் எல்லாம் கொடியது அழுக்காறுதான்! "கல்வி, புகழ் போன்றவற்றில் அழுக்காறு கொள்ளலாம்” என்று சிலர் விதிவிலக்கு வகுக்கின்றனர் இப்பொழுது. கூடவே கூடாது! திருவள்ளுவர் இரண்டு கொடிய