பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 119


என்று விளக்குகிறது. இன்று ஆசாரம் என்ற பெயரில் அன்னை மொழி பேசாமலும் அனைவருடனும் பழகாமலும் ஒதுக்கியும் ஒதுங்கியும் வாழ்வது ஒழுக்கம் அல்ல என்று வள்ளுவம் ஐயத்திற்கிடமின்றிக் கூறுகிறது. மக்களின் உணர்வறிந்து பழகுதலே ஒழுக்கத்தின் சிறப்பு.

நட்பு

மனித வாழ்க்கையை வளப்படுத்திச் செழிப்பூட்ட நிறை முயற்சி தேவை. அவரவர் முயல்வதோடு மட்டுமின்றி அவர்கள் வாழ்க்கையை வளப்படுத்தித் தூய்மைப்படுத்திச் சிறப்புடையதாக அமைக்க வேறு சில துணை உறுப்புகளும் தேவை. துணை உறுப்புகள் உயிர்ப்பும், உணர்வுமுடைய மனிதர்களாகவே அமைவது அல்லது அமைத்துக்கொள்வது என்பது வாழ்வியல் நடைமுறை. அவற்றில் முதல் உறுப்பு நட்பு. நட்புப் பயிலுதல், நட்புப் பெறுதல் இரண்டும் அருமையான முயற்சி. நட்புத் துறையில் எளிதாக வெற்றி பெற முடியாது. கெழுதகை நட்பு, உணர்ச்சியால் அமைவது; நலம் தருவது. நட்பு, ஒருவனின் அகவாழ்க்கை வளர்ச்சிக்கும் புற வாழ்க்கை வளர்ச்சிக்கும் துணையாய் அமைவது; உடன் நின்று உஞற்றுவது; நன்மையை வழங்குவது; தீமையிலிருந்து காப்பது. இத்தகைய நட்புநெறி, தோழமை பாராட்டப் பெறும். தோளொடு தோளாகத் துணை நிற்பவர் தோழரானார் போலும்! சோவியத்து புரட்சியைக் கண்டு வெற்றி பெறுவதற்கு அடிப்படையாக அமைந்த மந்திரச்சொல் 'தவாரிஷ்' என்பதாகும். உருசிய மொழியில் இச்சொல்லுக்குப் பொருள் "தோழர்" என்பது. வாழ்க்கையில் நட்பே சிறந்த உறுப்பு. ஒருவர் வாழ்க்கைக்கு உருக்கொடுக்கும் படைப்பாளன் நண்பன்தான். தாய்க்கு அடுத்து நண்பன்தான். நன்மை தீமை ஆகிய அனைத்துக்கும் பொறுப்பேற்று வாழ்க்கைப் பயணத்தின் உடன் வருபவன் அவன். நண்பன் அற்புதமான பாத்திரம். அதனால்தான் போலும் "காதலிக்-