பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"காயமே இது பொய்யடா!
   காற்றடைத்த பையடா!"

என்று பாடுவது முழுமையான மானுட வாழ்க்கையைக் குறிக்காது. அஃது உடம்பு நிலையாமையை மட்டுமே குறிக்கும். வாழ்க்கை யென்பது உடலை மட்டும் சார்ந்த தில்லையே! எழுதும் பேனாக்களில் மை வற்றலாம்; பேனாவே கெட்டுப் போகலாம். ஆனால் பேனாவால் எழுதிய காவியங்கள் நிலையில்லாதனவா? ஆதலால், வாழ்க்கை நிலையானது; அழியாதது, பெளத்த, சமண மாயாவாதக் கலப்புகளுக்குப் பிறகு வாழ்க்கையை இழித்தும் பழித்தும் பேசும் வழக்கம் தமிழகத்தில் இடம் பெற்றது. அத்தத்துவங்களின் விளைவால் நாடு செயலற்று வறுமையில் துஞ்சியது; அந்தியர்க்கு அடிமைப் பட்டது என்ற உண்மை உணரப்படுதல் வேண்டும். வள்ளுவத்தின் பார்வையில் வாழ்க்கை அருமையுடையது; பயனுடையது; புகழ் மிக்கது என்பதறிக.

'உயிரினத்தின் வாழ்க்கையில் சமயம் கால்கொண்டது. சமயத் தோற்றத்திற்குக் களன் விண்ணுலகமன்று; மானுடச் சாதியின் சமயம் யாரோ ஒருவரால் தயாரிக்கபெற்று இறக்குமதி செய்யப் பெற்றதுமன்று. மானுடச் சாதியின் இயல்பான வளர்ச்சியில் (Evolution) பரிணாமத்தில் தோன்றியது சமயம். மேலை நாட்டவர் அச்சத்தின் காரணமாகச் சமயத்தை கண்டனர். Fear is the beginning of God என்பது ஒரு பழமொழி. ஆனால் வீரத்திற்கும் தறுகண்மைக்கும் ஊற்றுக் கண்ணாக விளங்க வேண்டியது சமயம்.

"ஈர அன்பினர் யாதும் குறைவிலார்
வீரம் என்னால் விளம்பும் தகையதோ

(பெரியபுராணம் 5 : 9)

என்று சேக்கிழார் பெருமான், சமய நிலையினர்தம் வீரத்தைப் போற்றுகின்றார். ஆதலால் அஃது அச்சத் தினின்று பிறத்தற்கில்லை. அச்சத்தில் தோன்றிய சமயமும்