பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

154 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உயிர், அறிவுப் பொருள்; உயிர் அறிவு பெறுதற்குரியது. ஆயினும் அது இயல்பில் அறியாமையைத் தழுவிக் கிடக்கிறது. உயிர், தான் தழுவிக் கிடக்கும் அறியாமை யினின்றும் விலகி அறிவினைப்பெறும் முயற்சியே வாழ்க்கை . உயிர்க்கு அறியாமை இயல்பு என்பதை,

“பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு”

(358)

"ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்

வானம் நணியது உடைத்து"
(353


"அறிதோறு அறியாமை கண்டற்றால்”
(110)


ஆகிய குறள்வழி அறிய முடிகிறது. உயிரைப் பிணித்துள்ள இந்த அறியாமையை விளக்குவதற்குத்தான் கல்வி, கேள்வி, அறிவுடைமை மெய்யுணர்தல் போன்ற பல்வேறு அரிய முயற்சிகளையும், பிற வாழ்க்கை முயற்சிகளையும் அமைத்துக்காட்டுகிறது திருக்குறள். உயிர் அறியாமை உடையது; கடவுள், அறிவே திருவுருவானவன்; அறியாமை யுடைய உயிர், அறிவே திருவுருவான கடவுளின் துணையை நாடி, அறிவினைப்பெற்று வளர்தற்குத் துணை செய்தலே வழிபாடு. அதுவே வாழ்க்கையின் பயன், கடவுள் வாழ்த்தில் திருவள்ளுவர் இறைவனை 'வாலறிவன்' அதாவது 'தூய்மையான அறிவினன்' என்று பாராட்டுகின்றார். வாலறிவன்வழி நின்று அறிவைப் பெறுதலே வழிபாடு; வழிபாட்டின் பயன், உயிர் முற்றாக அறியாமையினின்றும் விடுதலை பெற்று, அறிவு நிலையை அடைதலே இறுதி நிலை. அந்நிலையிலேயே அவா அற்றுப்போகும். அந்நிலையே இன்ப நிலை; அந்நிலையே அன்பு நிலை. அதுவே ஞான நிலை. அதுவே வள்ளுவம் காட்டும் சமய வாழ்க்கையில்.

<poem>"ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்”

(370)