பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 155



வினைகள்

உயிர்கள் தொழிற்படும் திறத்தன. உயிர்கள் தொழிற்படுதல் இயற்கை. உலக இயக்கமே தொழிற்படுதலில்தான் அமைந்து கிடக்கிறது. உயிர், உயிர்ப்போடு உள்ளமைக்கு அதன் தொழிற்பாடே அடையாளம். உயிர் தொழிற்படாது சோம்பிக்கிடத்தல், பிறப்பின் நோக்கத்திற்கு முரண்; உலக இயக்கத்திற்கு மாறுபட்டது; இயற்கைக்கு இசைவில்லாதது. இம்மையில் துன்பத்தைத் தந்து மறுமை இன்பத்தையும் இழக்கச் செய்வது சோம்பிக்கிடத்தல். ஆதலால், ஓயாது தொழிற்படுதல் உயிர் செய்தற்குரிய தவமாகும். தொழிற் படுதலை வினைசெய்தல் என்று தமிழ்மரபு கூறும். வினை செய்தல் நன்மையும் தரும்; தீமையும் தரும். நன்மையும் தீமையும் செய்யும் வினைகளிலா? வினை செய்யும் நோக்கங்களிலா? வினை செய்தலின் பயனை, அது நன்றாயினும் தீதாயினும் அவரவர்களே அடைந்து அனுபவித்தல் வேண்டும் என்பது வள்ளுவத்தின் கோட்பாடு. இந்த நியதி இருந்தால்தான், தீவினைசெய்ய அஞ்சுவர்; நல்வினையில் நாட்டம் செலுத்துவர்.

"எனைப்பகை யுற்றாரும் உய்வர்; வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்” (207)

என்ற திருக்குறள் கருத்தினை உணர்க. அவரவர் செய்த வினைப் பயன் அவரவர்களை வந்தடைதல் தவிர்க்க முடியாதது என்பதை,

"தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடியுறைந் தற்று" (206)

என்ற குறள் வழி உணர்தல் நன்று. வினைகள் பயனைத் தருமா? வினைகளியற்றும் நோக்கங்கள் பயனாகப் பரிணமிக்குமா? வினைகளுக்குப் பயனில்லை. வினைகளை இயற்றும் நோக்கம், வினைகளைச் செய்யும் பொழுது