பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 159


அவ்வழிப்பட்ட ஒழுக்கங்களுக்கும்தான் பொருந்தும், சாதிக்கும், கடவுளுக்கும் செல்வத்திற்கும் ஊழிற்கும் யாதொரு தொடர்புமில்லை. ஊழின் காரணமாக இன்ன சாதியில் பிறந்தான் என்று கூறுதல் பிழையான கருத்து, அவன் ஒழுகும் ஒழுக்கத்தின்வழி வேண்டுமானால் கீழ் மேலாகும்; மேல், கீழாகும். இத்தனையாண்டுகள் வாழ்தல் என்பது ஊழின்பாற்பட்டதன்று. அஃது உடல்நலம் பேணிய பாங்கையும் பொறுத்தது. ஊழின் காரணமாகப் பணக்காரன் ஆனான் என்பது நெறிமுறை பிறழ்ந்த கொள்கை. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு மனிதரின் ஏற்பாடே என்பது வெளிப்படை. இந்தத் தீவினையைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். பரம்பரைச் சொத்து உரிமைக்குத் தடை ஏற்பட்டுச் சுரண்டி வாழ்கிற சமுதாயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டால் செல்வம் பெறுதற்குரிய ஆகூழ் இன்று ஏழைகளாக இருப்பவர்களுக்கே இருக்கும். இன்றைய செல்வந்தர்களில் பலர் வறுமைக்கு ஆட்படுவர். ஏற்றதாழ்வு உலகியல் நடைமுறையின் பிறழ்வு. . செல்வத்தைப் படைப்பதற்குரிய அறிவறிந்த ஆள்வினை பெற்றிருக்கின்றனரா? இல்லையா? என்பதுதான் ஊழ் பற்றிய ஆய்வு, ஆதலால் ஊழியல் தத்துவத்தை உலகியல் முறைப்பிறழ்வுகளுக்கு நியாயப்படுத்தக் கூடாது.

பிறப்பின் தத்துவம்

உயிர்கள், பல்வேறு பிறப்புக்கள் உடையன என்பது வழிவழி வரும் ஒரு கொள்கை. உயிரைப்பற்றிய விளக்கத்தில் உயிருக்குத் தோற்றமும் இல்லை; அழிவும் இல்லை என்று பார்த்தோம். அப்படியானால் பிறப்பு என்பது உயிர் தன்னுடைய நிகழ்கால நோக்காகிய இன்ப அமைதியைப் பெறுவதற்குரிய முயற்சியில் ஈடுபட உடுத்திக் கொள்ளும் ஒன்றே உடல், உடம்பு என்ற சொல்லில் முதல்நிலை 'உடு' என்பது. உயிர் இந்த உடம்பினைப் பொருத்திக் கொள்ளும், உடுத்தி கொள்ளும் நிகழ்வுதான் பிறப்பு. தன்னுடைய