பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 171


உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சமயச்சார்பற்ற உலகந்தழீஇய பொது நூல் திருக்குறளேயாம். அதனால் அது உலகப் பொதுமறை; மனித வாழ்வின் அனைத்துத் துறைகளையும் வளப்படுத்தத் தோன்றிய புதுமறை; பொது மறை. திருவள்ளுவர் சென்ற கால வரலாற்று நிகழ்வுகளையும் அவற்றின் விளைவுகளையும் எண்ணிக் குறைகளை நிறைகளாக்கும் நோக்கத்துடன் தமது நூலைச் செய்துள்ளார். திருவள்ளுவருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் அவர் கடவுளையே எல்லாமாக நினைந்து நூல் செய்ய வில்லை. திருவள்ளுவர் அரசனை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனாலும் எல்லா உரிமைகளும் அதிகாரங்களும் அரசனுக்கே என்ற கொள்கையை அவர் ஒப்பவில்லை. திருக்குறளின் அனைத்துக் கோட்பாடுகளுக்கும் நீதி சார்ந்த அறமே அடிப்படை.

இன்றைய ஆய்வுக்குரிய பேச்சு, திருவள்ளுவர் காட்டும் அரசியல். அரசியல் மனித வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத ஒரு தத்துவம்; கொள்கை; அரசியல் என்பது வாழும் முறை (Way of life) அல்லது வாழ்க்கை முறை (Way of living) ஆகும். அஃதொரு சமுதாய வாழ்க்கை முறை. அரசியல் சமுதாய வாழ்க்கைக்கு ஒழுங்கமைதியைத் தருவது. ஒருவருக்கு மேற்பட்ட பலர் கூடி வாழ்வதற்கும் பொருளியல் ஒழுங்கியல் முறைகளுக்கும் அரசியலே வழி வகுத்துத் துணை செய்கிறது. கி.மு. முதல் நூற்றாண்டில் திருவள்ளுவர் தோன்றித் திருக்குறள் செய்தார். திருவள்ளுவர் தோன்றிய நூற்றாண்டுக்கு முந்திய நூற்றாண்டுகளில் உலக நாடுகளில் பல்வேறு அரசியல் சிந்தனையாளர்கள் தோன்றியுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் கன்பூசியஸ், சாக்ரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், சிசரோ ஆகியவர்கள். கௌடில்யர் செய்த அர்த்தசாத்திரம் வட இந்தியாவில் ஆட்சி நூலாக அமைந்திருந்தது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் திருவள்ளுவருக்கு முன்பு சீரான அரசியல்