பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 179


நிதியைப் பற்றிக் கூறுமிடத்திலும் வரியைப் பற்றிய குறிப்பு இல்லை. சுங்கம் வசூலிக்கும் முறை கூறப்பெற்றுள்ளது.

"உறுபொருளு முல்கு பொருளுந்த னொன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்” (755)

என்ற திருக்குறள் கருத்து அறியத்தக்கது. நாட்டின் குடிமக்கள் அவரவருடைய பொருளியல் தகுதிக்கேற்றவாறு அவர்களே வலிய அரசிற்குரிய வரியைச் செலுத்த வேண்டும் என்பதே வள்ளுவத்தின் கொள்கை.

ஏனெனில் ஆட்சியுரிமையையும் படைக்கலத்தையும் பெற்றிருக்கும் அரசன், மக்களிடத்தில் பொருளை இரப்பது போலக் கேட்டாலும் அது கொடுமை என்று வள்ளுவம் தெளிவாக வரையறுத்துக் கூறுகிறது, இரப்பவன் அரசனாக இருப்பதால் இரப்பதற்காகக் கொடுக்காமல் போனால் அரசால் என்ன தீங்கு விளையுமோ என்றஞ்சி மக்கள் கொடுப்பார்கள். அது கொடுமையிலும் கொடுமை என்பது வள்ளுவத்தின் கருத்து.

"வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு” (552)

என்பது திருக்குறள். இன்று இந்தக் கொடுமை மலிந்திருக்கிறது. பிறிதொரு பார்வையில் அரசன் வேண்டுகோளின் மீது பணம் கொடுப்பவர்கள் அரசை - அரசின் எந்திரத்தை நடுநிலை பிறழ்ந்த முறையில் தங்களுடைய பொருளாக்கத்திற்கும் தங்களோடு இசைந்து வாராதாரை ஒறுத்தலுக்கும் பயன்படுத்துவர். இதன் மூலம் அரசின் செயல்முறை பிறழும். இன்று இம்முறை பிறழ்வுகளின் மூலம் தான் இந்திய நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து பணவீக்கமும் அவ்வழி விலை ஏற்றங்களும் ஏற்பட்டு மக்களைத் துன்புறுத்துகின்றன என்பதை மறுப்பார் யார்? அதோடு திருக்குறள் நின்றுவிடவில்லை, நல்லரசு இல்லாத