பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 227


களைப் படைப்பது பேதைமையேயாம். அதுமட்டுமின்றி ஏமாற்றமுமாகும். இறைவன், துய்த்தற்குரிய பொருள்களைப் படைத்துக் காப்பது உயிர்கள் துய்த்து மகிழ்ந்து, உய்தி பெறுதற்காகவேயாம். அங்ஙனம் துய்த்தற்குரிய புலன்களைப் பெற்றிருந்தும் துய்த்தற்குரிய வாயில்களாகிய பொறிகளைப் பெற்றிருந்தும் இறைவன் கருணையால் துய்த்தற்குரிய பொருள்களைப் பெற்றிருந்தும், பலர் துய்க்கும் வழியின்றித் தொல்லைப்படுகிறார்கள். தன்னலச்செறிவின் காரணமாகவும், துய்த்தல் துறத்தலுக்கு வாயில் என்ற அறிவின்மையினாலும், இறைநெறி பல்லுயிரையும் பேணிப் பாதுகாக்கும் நெறியே யென்ற உணர்வின்மையினாலும் இந்த அவலங்கள் ஏற்படுகின்றன. மனையறத்தைப் பெயரளவிலன்றி உண்மையிலேயே அறமாக நிகழ்த்த வேண்டுமாயின் துவ்வாதவரைப் பேண வேண்டும்.

அடுத்துப் பேணத் தக்கவராக வருபவர் இறந்தாராவர். அதாவது நம்முடைய தமிழ் மரபுப்படி, அவாவும் வேட்கையும் தணிந்துழிதான் உயிர் நிலையான நிலையை எய்துகின்றது. அதுவரையில் பிறப்பு இறப்புச் சுழலில் சிக்கிச் சுழல்கிறது. சில சமயங்களில் பருவுடலோடு இந்த உலகிடை நடமாடித் துய்த்து மகிழும்; சில பொழுது பருவுடலினின்று பிரிந்து இறந்துபட்டதாகக் கருதப்பட்டாலும் நுண்ணுடலோடு உலவிப் பொறிகளால் துய்க்காமல் புலன்களால் மட்டும் துய்க்கும். அங்ஙனம் பருவுடல் இறந்துபட்டு நுண்ணுடலில் திரியும் இறந்தார்க்கும் இல்வாழ்வோர் துணையாக நின்று, நீத்தார் நினைவு நாட்கள் கொண்டாடுவதன் மூலம் அவர்களுடைய துய்ப்புக்குத் துணை நின்று அவ்வழி வேட்கை தணியச் செய்யவேண்டும். இங்ஙனம் நுண்ணுடலில் வாழ்வோர் உலகியலில் இறந்து பட்டா ரென்று கருதப்பெற்றாலும் உண்மையில் இறந்தவர்களாகார். இவர்கள் நிலை பரிதாபகரமானது. துய்ப்பார்வத்தைத் தூண்டும் புலன்கள் செத்தபாடில்லை. ஆனால் துய்ப்பன