பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

266 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கூறாமல் ஐயத்தில் வைத்த திருக்குறள் இஃது ஒன்றேயாம். “நினைக்கப்படும்” என்ற அளவிலேயே நிறுத்தப்பட்டிருப்பது ஆயிரம் ஆயிரம் சிந்தனையைத் தூண்டுகிறது. “நினைக்கப் படும்” என்ற சொல்லுக்கு; “ஆராயப்படும்” என்று கொண்டு ஆக்கமும் கேடும் ஊழின் வழிப்பட்டது, என்றெழுதியுள்ளார் பரிமேலழகர். “அழுக்காறுடையானது செல்வமும், செவ்வி யான் கேடும் நினைத்த அந்தப் பொழுதிலேயே அழியும் - அதாவது அவை நிலைத்து நில்லா" என்பது பரிதியார் உரை. பரிமேலழகர் உரையினும் பரிதியார் உரை சிறந்ததாக இருக்கிறது. ஆயினும், “நினைக்கப்படும்” என்ற சொல்லில் அமைந்திருக்கின்ற, உணர்வு அழுத்தத்திற்கு ஏற்றவாறு விளக்கமில்லை. “நினைக்கப்படும்” என்ற சொல்லில் ஒரு "கடுமை” தொனிக்கிறது. "ஆராய்க!"- அஃதோர் ஆணை! அரசிற்கிடப்பெற்ற ஆணை! சான்றோர் உலகுக்கு . இடப்பெற்ற ஆணை! அழுக்காறுடையான் கண் ஆர்வம் இல்லை; ஆள்வினை இல்லை; அவ்வழி ஆக்கமும் இருத்தற்கு வாய்ப்பில்லை ; ஆயினும், ஆக்கம் இருக்கிறது! அது எப்படி?

திருவள்ளுவர் ஊழ் தத்துவத்திற்கு உடன்பாடுடை யவரே! ஆயினும், இன்று திரித்துக் கூறப்படுகின்ற ஒருபால் சார்புடைய ஊழ்த் தத்துவம் - ஊழ்க்கொள்கை திருவள்ளுவர்க்கு உடன்பாடன்று. உடைமை, உடலோடு தொடர்புடையது, அது பிறப்பு மாறுபடும் பொழுது உயிரைத் தொடர்ந்து செல்லாது. உயிரைத் தொடர்ந்து நுண்ணுடம்பு சார்பினதாக நீங்காது செல்லக் கூடியவை அறிவு, ஆற்றல், சீலம், பண்பு முதலியனவேயாம். இதுதான் திருவள்ளுவர் கருத்து என்பதைப் பல்வேறு திருக்குறள்களின் மூலம் உணரமுடிகிறது. உயிர்ச்சார்புடைய நலன்கள் பற்றியே திருக்குறள் பல்வேறு அதிகாரங்களில் ஓதுகிறது. உடைமை அதாவது பொருளுடைமை என்று ஓர் அதிகாரமே வைக்கவில்லை. அதற்கு மாறாகப் "பொருள் செயல் வகை" வைத்தது அறிதற்குரியது. பொருள் ஊழின் வயப்பட்டு வந்து