பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஊழிற்குத் தெய்வம் என்று மறுபெயர் உள்ளமையான், உரை பொருத்தமானதேயாம். ஆனாலும், தெய்வம் என்ற சொல்லை, கடவுள் என்ற வழக்கில் பொதுமக்கள் நம்புவதால் கடவுள் விட்ட வழி என்று கருதுகின்றார்கள். ஊழிற்கும் கடவுளுக்கும் உறவில்லை. ஊழிற்கு மனித ஆற்றலினும் மிகுந்த பேராற்றலும் இல்லை. வகுத்தான் என்ற சொல் மனிதனையே குறிக்கும். மனிதன் தன் உள் உணர்வுகளால் என்ன நினைத்தானோ அச்செயல்களின் விளைவையே அவன் அனுபவிக்க வேண்டும். சில பொழுது உள் நினைப்பு ஒன்றாகவும் செயல் அதற்கு மாறுபட்டதாகவும் இருக்கும். பலன் நினைப்பிற்கேயன்றிச் செயலுக்கல்ல. இதனை மாதவச் சிவஞான முனிவரும் சிவச் சிந்தனையோடு செய்யும் பாவமும் அறமாகும். சிவச் சிந்தனையின்றிச் செய்யும் அறமும் பாவமாகும் என்கிறார். செயலைவிட நினைவிற்கே வலிமை அதிகம். ஆதலால், ஒருவன் தன் உள்ளத்தால் ஒன்றை வகுத்துக்கொண்ட வழி நின்று வேறு வகையாக அனுபவிக்க முடியாது என்பதே இக்குறட்பாவின் கருத்து.

"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது" (377)
செய்க பொருளை

பொருளியல் சாத்திரம் மிகவும் நுட்பமானதொன்று. பொருளியல் பற்றிய அறிவு மக்களிடத்து மிகுந்தாலேயே நாட்டுப் பொருளியலின் தரம் நிலைபேறுடையதாக இருக்க முடியும். அரசு பணமுடைப்படுகிறது என்று சொன்னால், அரசுக்கு என்ன பணமுடை? அவர்கள்தாம் நோட்டு (Currency Notes) அடித்துக் கொள்ளலாமே என்று அறியாத மக்கள் சொல்லுகிறார்கள். நாட்டில் உள்ள பொருள் ஆக்கத்திற்கு ஏற்றவாறே நாணயங்களை. நோட்டுகளை