பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

358 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மாந்தன் வளர்ந்தால் மாதேவனும் மடிதற்று முன்வந்து ஏவல் கேட்கிறான். இல்லத்தின் முன்பு எளிய பணியாளனாக நிற்கிறான். மாந்தனால் முடியும். நம்முடைய நண்பனாலேயே முடியும்; நம்முடைய அலுவலராலேயே முடியும்; நம்முடைய உயிர்த் துணைகளாலேயே முடியும்; இது முக்காலும் உண்மை. ஆனால், அவர்கள் மனம் வைத்துச் செய்தால் தானே! அவர்களுக்குத் தான் செய்வதற்கு நோக்கமில்லையே! ஆதலால், என்னால் முடியுமா என்று வினாவுகிறார்கள்; முன் பட்டறிவு வேண்டாமா என்கிறார்கள்; வேலை அதிகம் என்று சொல்கிறார்கள்; சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்கிறார்கள்; காலம் ஒத்துவரவில்லை என்கிறார்கள்; வீட்டில் இடர்ப்பாடாக இருக்கிறது என்கிறார்கள்; இடுக்கண் நீங்கி மன அமைதியாக இருந்தால் தானே வேலை பார்க்கலாம் என்கிறார்கள்; மனநிறைவு என்ற தேவதையே, உழைப்பாளரின் உளவழிபாட்டுத் தேவதை என்பதை அறியாமல், "ஒரு கை தட்டினால் ஒலியெழுப்புமோ? இரண்டு கைகளும் தட்டவேண்டாமா?" என்கிறார்கள்; முடிந்த வரையில் செய்திருக்கிறோம் என்கிறார்கள்; நம் முயற்சியில் இவ்வளவுதான் முடிந்தது என்கிறார்கள்; நம் முயற்சியில் இவ்வளவுதான் முடியும். இதற்கு மேல் முடியாது என்கிறார்கள்; தவறிப்போய்விட்டது என்கிறார்கள்; மறந்து போய்விட்டது என்கிறார்கள்; செய்யக்கூடாதென்றோ எண்ணுகிறோம் என்கிறார்கள்; உயிர் மேல் உயிர் வைத்திருப்பதாகக் கசக்கியெடுக்கும் கண்ணீரில் காட்டுகிறார்கள்; பெரிய கும்பிடு போடுகிறார்கள்; செயலாற்ற மாட்டாத சவலை வாழ்க்கை வாழ்வோர் கையாளும் முறைகளை முன்னே கண்டோம்!

மேலே கூறிய இயல்புகளுடையவர்களின் நட்பைத் திருவள்ளுவர், தீ நட்பு என்றே கூறுகிறார்.

"ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை

சொல்லாடார் சோர விடல்"

(818)