பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 361


யிருக்க வேண்டும். நிலவுடைமைச் சமுதாயமென்றும், உழவர் சமுதாயமென்றும் இரு வேறு பிரிவு திருவள்ளுவர் காலத்திலிருக்க நியாயமில்லை. கணவனுக்கும் மனைவிக்குமுள்ள உரிமையைப் போன்றதோர் உரிமையை நிலத்திற்கும் கிழவனுக்கும் திருவள்ளுவர் கற்பிக்கின்றார். கணவனுக்கு மனைவி உரிமையுடையவள். அவனே, அவளை முழுதுறப் பயன்படுத்துதற்கு உடையவன். அதிலும் தமிழக மரபில் ஒருவர் மனைவியைப் பிறிதோர் ஆடவர் நெஞ்சினால் நினைத்தற்கும் உரிமையுடையவரல்லர். "மறந்தும் பிறர் நெஞ்சு புகாள்" என்று மணிமேகலை கூறும். "பிறர்மனை நயவாமை" என்றே ஓரதிகாரம் வைத்தார் வள்ளுவர். பெருமான். நிலத்திற்கும், அதன் உடைமையாளனுக்கும் உள்ள உரிமையைப் போன்றது என்று கூறுவதால் திருவள்ளுவர் காலத்திற்கு முன்பு நில உடைமைக்கும், உழைப்புக்கும் இடையில் மனிதர்கள் இல்லையென்பதும் திருவள்ளுவர் காலத்தில் பைய நில உடைமைச் சமுதாயம் தலைகாட்டியிருக்கிறது என்பதையும் உணர முடிகிறது.

நிலத்திற்கு உரியவன் நிலத்திற்குப் போகாதிருப்பானாகில் வீட்டிற்கு வராத கணவனிடம் மனைவி கோபித்துக் கொள்வதைப்போல நிலமும் புலந்து விளையாது என்று வள்ளுவர் பேசுகிறார். "செல்லான் கிழவன் இருப்பின்" என்பது வள்ளுவர் வாக்கு. "செல்லான்" "இருப்பின்" என்ற சொற்கள் அவர் காலத்தில் கால்கொள்ளும் நில உடைமைச் சமுதாயத்தைத் தெளிவாக விளக்குகின்றன. நிலத்திற்கு உரிமையுடையவன் நிலத்தை நாள்தோறும் பேணுகின்றவனாக இருக்கவேண்டும். இந்திய நாட்டின் வேளாண்மை குன்றி, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டதற்கே காரணம், நிலவுடைமைச் சமுதாய அமைப்பேயாகும். உடைமையாளன் எங்கோ வாழ்கிறான். உழைப்பாளன் கையில் காசில்லை. அவன் பரம்பரை ஏழை. செல்வத்தில் மட்டு மல்ல, சிந்தனையிலும்கூட. ஆதலால், தரமான வேளாண்மை