பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



திருமூலர், “யாவர்க்கும் ஆம் உண்ணும்போது ஒரு கைப்பிடி” என்று மந்திர மொழியாக ஆணையிட்டார். பாவேந்தர் பாரதிதாசன்,

“உலகம் உண்ண உண்டு உடுத்த உடுப்போம்”

என்றார்.

இங்ங்னம் பிறருக்கென முயலும் தவம் செய்வாரை அழுக்காறு அணுகாது. அவர்கள் வாழும் நாட்டிலும் அழுக்காறு என்ற பாவி நடமாடமாட்டான்! இத்தகு பண்பில் சிறந்து வாழ்பவர் பிறர் பெற்றுள்ள ஆக்கம் கண்டு மகிழ்வர். அவர்தம் ஆக்கத்திற்கு அரணாக நின்று பேணுவர். இத்தகையோரை அழுக்காறு அணுகாது; அகன்றுவிடும்.

பிறர் எல்லாம் வாழ்தலால் தன் வாழ்க்கை ஒருபொழுதும் தாழாது என்ற நம்பிக்கை வேண்டும். எவர் ஒருவரும் அவரவருடைய அயர்விலா உழைப்பும் வளர்ச்சியும் மாற்றங்களும் பொருந்திட வாழ்க்கையை நடத்துவாராயின், அவர்தம் நிலை என்றும் தாழாது. அதுமட்டுமின்றி மேலும் மேலும் உயரும். இந்த அறிவு இருந்தால் தற்காப்பின் காரணமாக அழுக்காறு கொள்ளார்.

அழுக்காறு பற்றி ஒரு தவறான கருத்து மக்களிடையில் நிலவுகிறது. இது முற்றிலும் தவறு. அது என்ன? அதாவது கல்வியில், நற்பணிகள் செய்தலில் அழுக்காறு கொள்ளலாம் என்ற கருத்து. இந்தக் கருத்து முற்றிலும் தவறானதாகும். நன்றாகக் கற்கும் மாணவனைப் பார்த்து மந்தமாகக் கற்கும் மாணவன் அழுக்காறு கொள்வதன் மூலம் நன்றாகக் கற்க முயலலாம் என்பது இவர்கள் கருத்து. இல்லை; அழுக்காறு பற்றிய உள்ளம் நல்லன எண்ண ஊக்குவிக்காது; நன்முயற்சிகளில் ஈடுபடுத்தாது. மாறாக, நன்றாகக் கற்கும் மாணவனின் தரத்தைக் கொச்சைப்படுத்தும் செயலையே செய்யும். இதுபோலவேதான் பணிகளுக்கும் எந்த வகையாலும் எந்தச் சூழ்நிலையிலும் அழுக்காறு ஆகாது.