பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 61


இன்பம் தரும்” என்ற பொருள்படப் பாராட்டியுள்ளார். சங்ககாலப் புலவர்களுள் கபிலர், பரணர், நக்கீரர் முதலிய பெரும்புலவர்கள் திருக்குறளைப் பாராட்டியுள்ளனர். திருவள்ளுவ மாலையில் திருக்குறளை மிகச் சிறப்பாகப் பாராட்டும் பாடல் மாங்குடி மருதனார் பாடியது.

“ஒதற் கெளிதாய் உணர்தற் கரிதாகி
வேதப் பொருளாய் மிகவிளங்கி - தீதற்றோர்
உள்ளுதோ றுள்ளுதோ துள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு”

என்பது அப்பாடல். திருக்குறள் இனிய எளிய நடையில் அமைந்தது. உரையாசிரியர் துணையின்றிப் படிக்கக் கூடிய ஒரே நூல் திருக்குறள்தான். எளிமை என்பதால் பொருளாழமில்லாதது என்று கருதுதல் கூடாது. நடை எளிது. உணர்த்தும் பொருள் அரியது.“வேதங்கள் வேதங்கள்” என்று மிகைபடப் பாராட்டுகிறார்களே அந்த வேதங்களின் உட்பொருள் முழுதும் அடங்கியது. “திருக்குறளை இந்திய தேசிய நூலாக்க வேண்டும்” என்ற குரல் நான்கு புறமும் இன்று கேட்கிறது. அப்படியானால் இராமகாதை, மகாபாரதம், பண்டை மறைகள் முதலியவற்றுக்கு அந்தத் தகுதி இல்லையா என்று கேட்கலாம். இவைகள் திருக்குறளுக்கு ஈடான இலக்கியங்களேயல்ல என்று பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார். ஆதலால் இந்திய மொழிகளில் தோன்றியுள்ள நூல்களில் திருக்குறளுக்கு ஈடான ஒன்றில்லை; திருக்குறளுக்கு ஒப்பச் சொல்லக் கூடியதாக இல்லை என்று தெரிய வருகிறது. திருக்குறளுக்குப் பிந்திய நூல்களிலும் திருக்குறள் எடுத்தாளப் பெற்றிருக்கிறது. “செய்ந்நன்றியறிதல்” என்ற அதிகாரத்தைப் புறநானூறு பாராட்டுகிறது.


    காரைக்குடி மெய்யம்மை பதிப்பகம் (இராமசாமி தமிழ்க்கல்லூரி) 13ஆவது ஆண்டு மீனாட்சி ஆச்சி நினைவுச் சொற்பொழிவு 20.2.95