பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை 133



ஏப்ரல் 26


நான் வாழ நடுவுநிலை அறிவு தேவை, ஆதலால் நீ இருப்பது உண்மை.


இறைவா, நீ இருக்கிறாயா? உண்மையாகவே நீ இருக்கிறாயா! நீ இல்லை என்பவர் முன் நீ ஏன் உன்னை நிரூபணம் செய்து கொள்ளவில்லை? இறைவா, ஆம் உண்மை தான், என் முன்னே நீ இருப்பதாக நிரூபணம் செய்து கொள்வதில் என்ன பயன்?

இறைவா, நீ இருப்பதும், தொழில்களை இயற்றுவதும் உன் பொருட்டல்ல. உயிர்க்குலம் அனைத்தும் தழைத்திட நீ இருந்தருள் செய்கின்றாய். உயிர்க்குலம் ஆணவத்தின் இரும்புப் பிடியிலிருந்து விடுதலை பெறத் துணை செய்கின்றாய். இறைவா, பொன்னால் பொன் பெற்றோருக்குப் பயனுண்டு. பொன் பெற்றோரால் பொன்னுக்கு யாது பயன்?

இறைவா, நீ எனக்குத் தேவை, இன்றியமையாத் தேவை. என் வாழ்க்கை இயங்குகிறது. என்னைச் சுற்றி ஓர் உலகம் இயங்குகிறது. அந்த உலகத்தில் எனக்குத் துய்ப்பனவும் உய்ப்பனவும் உண்டு. நீ எனக்குத் தேவை. அப்படி நீ இல்லாது போனாலும் உன்னை நான் கண்டுபிடித்தாக வேண்டும். இல்லை, இறைவா! கண்டுபிடிப்பதில் காலதாமதமானால் இறைமைத் தன்மையுடைய உன்னை நான் கண்டு பிடித்தாக வேண்டும். அப்பொழுது நீ காணப்படாது போயின் நான் உன்னையே படைத்துக் கொண்டாதல் வேண்டும்.

ஆம் இறைவா! நான் வாழ நடுவுநிலை, அறிவு பெற நீ தேவை. இவற்றை, நான் பெற்று வளர்கிறேன். ஆதலால் நீ இருப்பது உண்மை. இறைவா, நின் காட்சியினை அருள் செய்க!