பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






மே 27


பொறி புலன்கள் அனைத்தும் மெளனத்தில் ஈடுபடும் அருள் நயந்த வாழ்வினை வழங்கு!


இறைவா, பேச்சிறந்த பூரணமே! என் வாழ்நாள், "பேச்சு, பேச்சு" என்று கழிகிறது. எப்போதும் பேசுகிறேன். எங்கேயும் பேசுகிறேன். ஒரு நாள், ஒரு பொழுது பேசாநிலை மெளனம் கொண்டேனில்லை!

இறைவா, பெட்டியில் பணம் போல, ஆற்றல், பேசா நிலையிலேயே பாதுகாக்கப் பெறுகிறது. "பேச்சு” நன்மையும் செய்கிறது! அதே அளவுக்குத் தீமையும் செய்கிறது. மெளனத்தில் நன்மையே மிகுதி.

இறைவா, நான் பேசுகிறேன்! பேசிக் கொண்டேயிருக்கிறேன். ஊரார் வேறு அழைத்துப் பேசச் சொல்கிறார்கள்! என் பேச்சு நண்பர்களையும் தந்திருக்கிறது. பகைவர்களையும் தந்திருக்கிறது!

இறைவா, இனி பேசுவது வேண்டாம்! பேச்சுக் கச்சேரி போதும்! அரட்டை அடித்தல் வேண்டாம். பெரிய பெரிய பேச்சாளர்கள்கூட, பெரிய காரியங்களைச் செய்ததாக வரலாறு இல்லை. வாய்ப்பந்தல், வாழ்வளிக்காது அல்லவா?

இறைவா, இனி நான் பேசாதிருக்கும்படி அருள்செய்! நாளும் மெளன நிலையிலேயே காரியங்களை இயற்றிடும் இனிய பழக்கத்தினை அருள் செய்க! பேசா வரம் அருள்க!

மெளனத்தில் பழகும் பெருவாழ்வினை அருள்செய்க. பொறிகள்-புலன்கள் அனைத்தும் மெளனத்தில் ஈடுபடும் அருள் நயந்த வாழ்வினை அருள் செய்க!