பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

59




பிப்ரவரி 12


இறைவா! கதவைத் திற, வெளியே வா.


இறைவா! நீ எவ்வளவு கருணை கொண்டு என்னை வாழ்விக்க, கற்சிலையிலும் எழுந்தருளியிருக்கிறாய். உன்னைக் காணும் பொழுதெல்லாம் உன் திருவுருவத்தை ஆரத்தழுவி உச்சிமோந்து அழவேண்டும் என்ற ஆர்வம் பிறக்கிறது.

ஆனால், நீ கருவறையிலன்றோ சிறைப்பட்டு விட்டாய். என்ன செய்ய? கண்ணப்பர் காலத்தில் இல்லாத தடைகள் தோன்றிவிட்டனவே. கடவுளே! ஏன் இந்த நிலை; கதவைத் திற, வெளியே வா என்னைத் தழுவி முத்தமிடு. வாழ்த்து. இறைவா! என்னை வளர்க்க இயலாத "திருக்கோயில் கொண்டருளும் நிலையை" விரும்புகின்றாயே. சத்தியமாக நீ விரும்பமாட்டாய். குறிக்கோள் இல்லாத என் வாழ்க்கையைக் குறிக்கோள் உடையதாக மாற்றுக என் வாழ்க்கையே நினக்கு வழிபாடு, இறைவா, அருள் செய்க!