பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாழ்வித்து வாழ்தலே மனிதனின் வெற்றிக்குரிய சுருக்கவழி. வையகம் உண்ணுதலே அவன் உயர்வதற்குரிய ஒரே வழி. வையகம் உண்ணாமல் உண்டால் அவன் சதை வளரலாம்; ஆனால் அவன் வளரமாட்டான். அவனைச் சுற்றிக் காக்கை கழுகுதான் வட்டமிடும். மனிதர்கள் வட்டமிடமாட்டார்கள். அவனுக்காக அவனழுதால் எவ்வளவு நாளைக்கு அழுவது? அவன் துன்பத்துக்கு அழுது முடிக்க அவன் கண்களுக்கு ஆற்றல் உண்டா? ஒரு போதும் இல்லை. அவனுடைய துன்பத்தைக் கண்டு அழ ஆயிரமாயிரம் கண்களை அவன் பெறவேண்டும். அவனுடைய துன்பத்தைத் துணித்து மாற்ற எண்ணில் கரங்கள் முன் வரவேண்டும். அது எப்பொழுது நிகழும்? இவன் மற்றவர் துன்பத்தை-மற்றவற்றின் துன்பத்தைத் தன் நோய் போல் எண்ணி அழும் பொழுது தான்; மாற்றத் துடிக்கும் பொழுதுதான். மனிதனே போதும், உனக்கு நீயே அழுது கொண்டது. அது வெறும் புலம்பல்; அதில் தன்னல வாடை வீசுகிறது; அன்பின் ஈரம் இல்லை; ஒரே வறட்சி மயம்! அழு; ஆனால் உனக்காக அழாதே; மற்றவர்களுக்காக அழக்கற்றுக்கொள். அதுவே அன்பின் தவம், வாடிய பயிரின் வாட்டமெலாம் கண்டு வாடி அழுதாரே, அந்த வள்ளலாரை நினைத்துக்கொள். அந்த உயர்ந்த அன்பை நீ எண்ணு; நெஞ்சத்தில் தேக்கு. அந்த அன்பே தவம். அந்த அன்பே சிவம்; அன்பும் சிவமும் இரண்டல்ல! ஒன்றேயாம். மனிதனைச் சிவமாக்குவது அன்பு என்ற ஒன்றேயாம்.

அன்பலால் பொருளும் இல்லை
ஐயன் ஐயாற னார்க்கே[1]

என்றார் அப்பரடிகள். இந்த அன்பு வையகத்தை ஆட்சி செலுத்த வேண்டும், வழி நடத்த வேண்டும் என்ற தணியாக் காதலினால் இன்று திருக்கோயில்கள் தோறும் எழுந்தருளியுள்ள இறைவன் - எல்லாமாக இருந்தருளும் இறைவன் -

  1. திருநாவுக்கரசர், நான்காந்திருமுறை, 399