பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாராட்டுவார். பெற்றோர், மகனை அறிவார்ந்த உணர்வில் பெற்றால் மட்டும் போதாது. மீண்டும் காலத்தின் சூழலால் கெட்டுவிடாமல், வள்ளுவர் அவனை வளர்த்தது போலத் தன் மகனை இவன் வளர்க்க வேண்டும். மகனும் தந்தையின் தகுதியறிந்து ஒழுகித் தந்தைக்குப் புகழைச் சேர்க்க வேண்டும்.

மனிதன் ஆற்ற வேண்டிய அறங்களும் பயனும்

இங்ஙனம் மனிதன் தனியே பிறந்து, வள்ளுவப் பேராசான் துணைகொண்டு குடும்பத் தலைவனாகி விட்டான். தனி மனிதனின் வாழ்க்கைப் பயணம் இந்த அளவோடு நிற்கவில்லை. அவன் சமுதாயத் தலைமையும் ஏற்கவேண்டும். அவனோடு வாழும் சமுதாயத்திற்கு அவன் தொண்டு செய்ய வேண்டும். ஒரு தலை சிறந்த மனிதன் வாழும் சமுதாயத்தில் கொலை நிகழக்கூடாது. கொல்லாமை ஒரு சிறந்த பேரறம். திருவள்ளுவரின் நெஞ்சம் கொல்லாமை அறத்தில் தோய்ந்திருந்தது.

ஒன்றாக நல்லது கொல்லாமை[1]

என்பார். பிறநெறியினர் வேள்வியின் பொருட்டுக் கொல் வதைக்கூட திருவள்ளுவர் மறுக்கின்றார்.

அவிசொரிந்து ஆயிரம் வேட்டவின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று[2]

என்பார். கொல்லாமை என்பதற்குத் திருவள்ளுவர் கண்ட கருத்தே புதிது. உலகில் யாதொரு மறையும் கூறாதது. அஃதென்ன? திருவள்ளுவர் கொல்லாமை அதிகாரத்தில்,

பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை[3]

என்பார். பொருளமைதியை நோக்கினால் இத்திருக்குறள் கொல்லாமை அதிகாரத்திற்கு இயைபுடையதன்று. ஈதல் ஒப்புரவறிதல் ஆகிய அதிகாரங்களில் கூறப்படும் பொருட்

  1. திருக்குறள், 323.
  2. திருக்குறள், 259.
  3. திருக்குறள், 322.