பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

187


மாகிய பொருள்களையும் தோற்றுவித்து உயிரையும் அசைத்து நிற்கும். உமி, அம்முளை தோன்றுதற்கு நிமித்த காரணமாக இருத்தல் போல ஆணவ மலம் அச் சுக, துக்கத் தோற்றத்திற்கு நிமித்த காரணமாய் நின்று அவற்றை முறுகுவித்து உயிர் நுகருமாறு நிலை பெறுத்தும். ஆன்மாவின் சுக துக்கங்களுக்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களும் முதல், துணை, நிமித்தங்களாக அமைந்தன.

ஆணவம், மாயை இவற்றுக்கு விளக்கம் கிடைத்தது. கன்மம் என்றால் என்ன? கன்மம் என்ற சொல்லும் கர்மம் என்ற சொல்லும் ஒரு பொருட்சொற்கள். அதாவது வினை அல்லது செயல் என்பது பொருள். தத்துவ ஞான உலகம் செயலைப் பற்றிய துண்பொருள்களை விளக்குகிறது. ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நோக்கம் உண்டு; பலனும் உண்டு. அப்பலனை அனுபவித்தலும் ஒரு செயலாகும். செயல் மட்டுமின்றி செயல் செய்தற்கு முதல் நிலையாக இருக்கிற எண்ணம், செயலோடு தொடர்புடையதாக இருக்கிற சொல் ஆகியவையும் கன்மத்துள் அடங்கும். செய்யப் பெறும் செயல்களுக்குப் பலன் உண்டு. அச் செயல்களைச் செய்தவர்களையே அப்பலன்கள் சாரும். அச்செயல்களைச் செய்தாருக்கு அவ்வனுபவங்கள் உரிமையுடையன. அவை இன்பமாயினும், துன்பமாயினும், அவர்கள் அவற்றை அனுபவித்தே தீர வேண்டும். இதனைத் தருமைக் குரு ஞானசம்பந்தர்,

ஊட்டும் வினையிருந்தால் உன்னாணை உன்பதத்தைப்
பூட்டிப் பிடித்துப் புசிப்பிக்கும்-கேட்டுத்
திரியாதே வந்துதில்லைத் தெய்வமே என்றென்(று)
எரியாதே; நெஞ்சே இரு

என்றருளினார். இப்பயன்களில் சில, உடனே துய்ப்புக்கு வரும்; சில காலங்கடந்து வரும். ஏன்? காலங் கடந்து வருவானேன்? என்று சிலர் கேட்பர். உயிர்களின் துய்ப்பின்