பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தகுதியைப் பொறுத்துக் கால நியதியின்கண் முறைப்படுத்தப் பெறுவதால் முன் பின்னாக வருகிறது! இப்பிறப்பில் தீமையே செய்வார் இன்புறுதலும், நன்மையே செய்வார் துன்புறுதலும் உடன் நிகழ்வுகளின் விளைவுகளன்று; இதனைப் பட்டினத்தார்,

என்செய லாவதி யாதொன்று மில்லை இனித்தெய்வமே
உன்செய லேயென் றுணரப்பெற் றேனிந்த ஊனெடுத்த
பின்செய்த தீவினை யாதொன்று மில்லை பிறப்பதற்கு
முன்செய்த தீவினை யோவிங்ங னேவந்து மூண்டதுவே.

(திருப்பாடற்றிரட்டு - 22)

என்று குறிப்பிடுவார்.

வினை வழிப்பட்ட இன்ப துன்பங்களைத் துய்ப்பதற்காகவே உயிர்களுக்குக் கறங்கு போலப் பிறப்பும் இறப்பும் சுழன்று வருகின்றன. இங்ஙனம் கன்மம் காரணமாகப் பிறப்பும், பிறப்பின் காரணமாகக் கன்மமும் மாறி மாறி சங்கிலித் தொடர் போல வரும். அப்படியானால் உயிர்களின் முதற் பிறப்பும் கன்மத்தின்பாற் பட்டதுதானா? இல்லை, முதற் பிறப்பு அருட்கொடை. ஆனால், அப்பிறப்பில் உயிர் விருப்பு வெறுப்புகளுக்கு ஆளாகியதால் அவ்விருப்பு வெறுப்பு, கன்மமாகி மறுபடியும் பிறப்பு ஏற்படுகிறது. உயிரின் இயற்கை துய்த்தல், செயற்படுதலும், துய்த்தலும் கன்மமாகி விடுவதில்லை. செயலைச் செய்யும்பொழுது, எண்ணத்தில் ஏற்படும் விகாரமும், துய்க்கும் பொழுது ஏற்படும் விகார உணர்ச்சிகளும்தான் கன்மமாகின்றன.

எச்செயலைச் செய்யும் பொழுதும் திருவருள் சிந்தனையோடு செய்தல் மூலம், துய்க்கும் பொழுது ஆசையும் விகாரமுமின்றிக் கடப்பாடு என்று கருதித் துய்த்தால் கன்மம் சேராது; என்றும் வாழ்க்கைக் கணக்கு நேராக இருக்கும். சுந்தரர் வாழ்க்கை இத்தகையது. செய்யப் பெறும் கன்மங்களை-வினைகளைச் சித்தாந்தம் மூவகைப்படுத்தும்.