பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

191


இருள் தன்னிடத்திலுள்ள பொருளை மறைக்கும்; தன்னை மறைக்காது. ஆனால் ஆணவம் தன் செயலையும் மறைக்கும்; தன்னையும் மறைத்துக் கொள்ளும். இருளில் கிடக்கும் ஒரு பொருள் நம் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும். ஆனால் அப்பொருளை மறைத்திருக்கும் இருள் நமக்குத் தெரியவே செய்கிறது. ஆதலால் இருள் தன்னை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டும் ஆணவம் தன்னைக் காட்டாமலே மறைத்து நின்றும் தொழிற்படுகின்றன. அதனாலேயே நம்மில் பலர் ஆணவம் இன்னதெனத் தெரிந்து கொள்ளாமலே ஆணவ மயமாகி நிற்கின்றோம். ஆணவமே நமது குறைக்கு, அறியாமைக்குக் காரணம் என்று நாம் உணர்வதில்லை. ஆணவ மயக்கில் கிடக்கும் உயிர், விருப்பார்வங்களைக் கொள்வதில்லை, செயற்படுவதும் இல்லை. ஆன்மா தன் நிலையை இழந்து ஒடுங்கிக் கிடக்கும். இந்நிலை வரையில் ஆன்மா படும் அவத்தை கேவல அவத்தையாகும்.

ஆணவக் கூட்டின் பயனாக முடங்கிக் கிடந்த ஆன்மாவைக் கண்டு இரக்கப்பட்ட சிவம், ஆன்மாவை மூலையிலிருந்து முற்ற வெளிக்குக் கொண்டுவரத் திருவுள்ளம் பற்றியதாலேயே ஐந்தொழில் நிகழ்கிறது. சிவம், சக்தியின் மூலம் மாயையை இயக்கித் தொழிற்படுத்தி உயிர்கள் உடம்பையும், உலகையும் பெற உதவி செய்கின்றது. இஃது ஆன்மாவின் இரண்டாவது அவத்தை இந்த நிலையில் ஆன்மா மேலும் இரண்டு மலங்களோடு கூட்டுச் சேர்கிறது. அவ் இரண்டு மலங்களாவன: கன்மம், மாயை என்பன.

ஆன்மா உறையும் உடல், உலகம் ஆகியவற்றின் தோற்றத்திற்கும் ஒழுக்கத்திற்கும் மூலகாரணம் மாயை. ஆன்மா உடலோடு சேர்ந்த பின்தான் ஆன்மாவின் அறிவு, இயக்கம் பெறுகிறது. அறிவு இயக்கத்திற்குத் துணை செய்யும் மாயையை ஏன் மலம் என்று கூற வேண்டும்? மாயையிலிருந்துதான் உடலையும், உடற் கருவிகளாகிய அறி