பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கருவிகளையும், செயற் கருவிகளையும் புலன்களையும் உயிர் பெறுகிறது; அவைகளின் மூலம் அறிவைப் பெறுகிறது. ஆனாலும் அந்த அறிவு, நிறை நலம் சான்றதன்று. ஆனாலும் அறிவு, இயக்கத்திற்குத் துணையாக இருப்பதால் அதை, (மாயையை) விளக்கு என்று உபசரித்தலும் சைவ சித்தாந்தத்தில் உண்டு. மாயை யென்பது ஒரு நுண்பொருள்; சடப் பொருள். மாயையைச் சிவசக்தி இயக்குவதால் உலகம் தோன்றுகிறது. கண் முதலியன ஞானேந்திரியங்கள்-அறிவுக் கருவிகளும் மனம், புத்தி முதலிய அகக் கருவிகளும், மாயையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆயினும் மாயை ஒன்றே. அது நிலையானது; வடிவமற்றது. உலகம் தோன்றும் வித்தும் மாயையே. அந்த மாயை அறிவற்றது; இயங்காப் பொருள்; எங்கும் பரந்திருப்பது, இறைவனுடைய தொழிலுக்குத் துணை நிற்பது. ஆயினும் உயிர்களை மயக்கவும் செய்யும்; இது மாயையின் இலக்கணம். சிலர் கூறுவது போல் மாயை இல் பொருளோ, பொய்த் தோற்றமோ அல்ல. மாயையின் இலக்கணத்தை,

நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத் திற்கோர்
வித்துமாய் அசித்தா யெங்கும் வியாபியாய் விமல னுக்கோர்
சத்தியாய்ப் புவன போகந் தனுகர ணமும் உயிர்க்காய்
வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமும் செய்யுமன்றே

(சித்தியார் - 143)

என்று சிவஞான சித்தியார் விளக்கும்.

மாயை பொய்மையாக இருக்குமானால் உலகம் தோன்றாது; ஆதலால் மாயையின் இருப்பு உணரப்படுகிறது இவ்வுலகத் தோற்றத்திற்கு மாயை முதற்காரணம்; இறைவன் நிமித்த காரணம்; அதனுடைய சக்தி துணைக்காரணம். சடப்பொருளாகிய மாயையை இறைவன் தனது அருட் சக்தியால் இயக்கக் கருவிகள், துய்ப்புப் பொருள்கள், தூய்மை