பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நன்மையைச் சாதிக்காமல், துன்பத்தைத் துடைக்காமல், இன்பத்தைப் படைக்காமல் கிழடு தட்டிச் செயலிழந்து போன நமது சமய அமைப்புக்களின் குறையுடைய நடைமுறைகளே காரணம். மீண்டும் மனித குலத்தின் உயிர்ப்புள்ள தேவை சமயம் என்பதை உணரச் செய்தற்குரிய சிந்தனையில் ஈடுபடுங்கள்! சிந்தனைக்குச் செயலுருவம் வழங்குங்கள்!

சமயத்தின் இலக்கணம்

சமயம் என்பது ஒரு தத்துவம்; வாழ்க்கை முறை. சிந்தனைக்கு வரைமுறைகள் உண்டு. ஆனாலும் சிந்தனைக்கு வரம்பில்லை. உயர்ந்த சமயம் என்பது மனித வாழ்க்கையை மேம்பாடடையச் செய்வதை மையமாகக் கொண்டே விளங்கும். உணர்ந்த சயமம் மனிதனுக்கு அவனை அறிந்து கொள்ளச் செய்யவும், அவனிடமுள்ள குறைகளையும் அவ்வழி நிகழும் குற்றங்களையும் உணரச் செய்யவும் வேண்டும். குறைகள் வேறு; குற்றங்கள் வேறு. குறைகள் உயிர் வாழ்க்கைக்குத் தேவையானவற்றை முழுமையாகப் பெறாமை! அந்த வறுமையின் காரணமாக ஏற்படுவன குற்றங்கள்! குறைகளுடையாரிடத்தில் குற்றங்கள் இருக்கும். குற்றங்களிருப்பாரிடத்துக் குறைகளிருக்குமென்று உறுதியாகக் கூறமுடியாது. உயிரியல்பில் குறையில்லாதாரிடத்தும் ஒரோ வழி குற்றங்கள் நிகழும். அக்குற்றம் அவரிடமிருந்த குறையினால் விளைந்ததன்று. சமுதாயக் குறையினால், ஆட்சிக் குறையினால் தோன்றும் குற்றங்களும் உண்டு. உயிர்கள்தம் நிலையினை உணரச் செய்தலும் குறைகளினின்றும் நீங்கி நிறைகளைப் பெறத் தூண்டுதலும் சமயத்தின் முதல் இலக்கணம். இதுவே, சமயத்தின் தொடக்கம்.

உயிர்-ஓர் விளக்கம்

இந்த முதல் அடிப்படை இலக்கணம்கூட இன்றுள்ள நிலையில் பல சமயங்களுக்கு இல்லை. உயிர்களைக் கடவுள்