பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தலையில் மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும். அதேபோல, ஒவ்வொரு மனிதனும் நாள்தோறும், தனக்கு எண்ணத் தொலையாத தீங்குகளைச் செய்து கொள்ளுகிறான். அவன் சற்று நேரம் ஓர் இடத்தில் தனியே அமர்ந்து விட்டால் அவனுடைய மனம் படுகிறபாடு எந்த எல்லையிலும் நிற்காமல், எங்கோ சுற்றுகிறது. அது சுவர், வேலி, நாடு என்று எல்லாம் ஏறி இறங்கி எங்கோ சுற்றுகிறது. அது விவஸ்தையே இல்லாத ஒன்றாக இருக்கிறது. அதனால்தான், இந்த மனம் என்ற ஒன்று இருக்கிறதே, அதை மனிதன் தன்னுடைய கட்டுப்பாட்டின் உள்ளே கொண்டு வரவேண்டும்.

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு

என்றார் திருவள்ளுவர்.

அறிவுக்கு இலக்கணம் என்னவென்று சொன்னால், எங்கோ செல்கின்ற மனப்புலனைத் தலையிலே குட்டி, ‘அங்கே எங்கு போகிறாய்? இங்கே வா? என்று நல்லவற்றிலே செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்துகின்ற மனப்பாங்கு நமக்கு நிறைய இருக்க வேண்டும். தனக்குத் தானே துன்பத்தைச் செய்து கொள்ளுவதைப் போல ஒவ்வொரு மனிதனும் செய்து கொள்ளுகிறான். போகிறபோது சொல்லுவான், கல் இடித்துவிட்டது என்பான். வாயிற்படி இடித்து விட்டது என்பான். அது இடிக்கவும் இடிக்காது; அதற்கு நகருகின்ற சக்தியும் கிடையாது. இவன் கவனக் குறைவாகப் போய் இடித்துக் கொண்டு பழியை அதன்மேல் போடுவான். இவன் எதாவது கவனக் குறைவாக, தரக்குறைவாக வாழ்ந்து விட்டு, ஏண்டா? இப்படிச் செய்தாய்’ என்று கேட்டால், யாராவது இராமசாமி, கோவிந்தசாமி இவர்கள் மேல் பழியைப் போடுவான். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குத் தீங்குசெய்ய முடியாது. தீங்கு செய்கிற மனிதன்