பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழும் சமயமும் சமுதாயமும்

343


பேராற்றலை நோக்கி அழுகிற அழுகை! இந்த அழுகை என்பது அவலத்தின் பாற்பட்ட அழுகை அல்ல. மண்ணிலே இருக்கிற சின்னஞ்சிறு கொடிகள், விண்ணிலே இருக்கின்ற கதிரவனோடு உறவுகொண்டு, அந்தக் கதிரவனின் ஆற்றலைக் கொண்டு வளர வேண்டும் என்று துடிப்பதைப் போல, கங்கு கரையற்றவனாக, எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவனாக, வானாக, மண்ணாக, வளியாக, ஒளியாக, ஊனாக, உயிராக, இன்மையுமாய், உண்மையுமாகப் பரந்து நிற்கின்ற பரம் பொருளினுடைய ஆற்றலைப் பெறுவதற்காக, அவனுடைய துணையைப் பெறுவதற்காக, உயிர்கள் துடிக்கின்ற துடிப்புக்குப் பெயர் வழிபாடு. அது உயிர்த் துடிப்பாக இருக்க வேண்டும். அந்த உயிர்த் துடிப்புடைய வழிபாடு என்றைக்கு நிகழ்கிறதோ, அன்றைக்கு எந்த மனிதனும் கடவுளைக் காண முடியும். அதற்கு ஒன்றும் வரையறை கிடையாது; எல்லை கிடையாது.

அந்த உயிர்த் துடிப்புள்ள வழிபாடு நம் நாட்டில் பரவினால் உயிர்த் துடிப்புள்ள வழிபாடு வந்து விட்டால், எல்லா உயிரும் மகவென ஒக்கப் பார்க்கின்ற, பெருந் தன்மையான வாழ்க்கை வந்து விடும். எல்லா உலகத்திற்கும் தலைவனாக இருக்கின்றவன் கடவுள் என்ற பரந்த மனப்பான்மை கருக்கொள்ளும். அப்பொழுது உலகம் நெருங்கும். நிச்சயமாகச் சொன்னால், அரசுகளால், பொருளியல் முயற்சிகளால், விஞ்ஞானத்தால், உலகத்தை அன்பு வழியாக இணைக்க முடியாது போனாலும், சிறந்த ஆன்மீகம் உலகத்தை இணைக்கும். உலகத்தை இணைத்து, ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற புதிய சமுதாயத்தை உருவாக்கும். இதைத்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே, ‘தென்னாடுடைய சிவனாக இருக்கின்றவன் எந்நாட்டவர்க்கும் இறைவனாக’ இருக்கின்றான் என்று சொன்னார்கள். எந்நாட்டவர்க்கும் இறைவனாக இருக்கின்ற அந்தப் பரம்பொருளை நினைந்து, நினைந்து, நனைந்து