பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

432

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இலட்சியமற்று இங்குமங்கும் அலைந்தலைந்து அல்லலுறும் ஆன்மாவை உருக்கிக் கசிய வைத்து நன்னெறிப்பட வைக்கும் பேராற்றல் வழிபாட்டிற்குண்டு.

இறைவழிபாடு இன்பங்கள் எல்லாவற்றிற்கும் மேலான இன்பத்தை-பேரின்பத்தை நல்குகின்றது. கவலை தோய்ந்த கருத்தைக் களிப்படைய வைக்கிறது. பைத்திய நிலையை பக்குவப்படுத்திப் பயனடையச் செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாகச் சிரித்து வாழவும், கொடுத்து மகிழவும் போதிக்கிறது. சிரிப்பதற்காக மனிதன் பல துறைகளை நாடியோடித் திரிகிறான். நாடகத்திலும் திரைப்படத்திலும் கால்கடுக்க நின்று ஒன்றேகால் ரூபாய்க்கு டிக்கட் வாங்கிச் சிரிப்பை அனுபவிக்கிறான். சினிமாவிலே டணால் தங்கவேலுவின், சிரிப்பை - இராதாவின் சிரிப்பைக் கண்டு ஆனந்திக்க மழையிலும் வெய்யிலிலும் நின்று உழல்பவர்கள் எத்தனைபேர்! காசில்லாமல், செலவில்லாமல் கருத்தைக் கனிய வைத்துச் சிரிப்பிலாழ்த்திப் பேரின்பத்தை நல்கும் வழிபாட்டு நெறியினைப் பின்பற்ற மனிதராகிய நாம் நினைக்கவேண்டும்.

உலகியலிலே சிரிப்பதற்கு எவ்வளவோ நிகழ்ச்சிகள் உண்டு. நாள்தோறும் நடைபெறும் சம்பவங்கள் நம்மைக் கைகொட்டி நகையாட வைக்கின்றன. நம்மிற்சிலர் உலகத்தைப் பார்த்துச் சிரிக்கத் தெரியாதிருக்கிறோம். தலைசிறந்த தத்துவப் பேராசிரியர்கள் உலக வாழ்க்கையிலிருந்தே சிரிப்புக் கிடமானவைகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். அவர்கள் காட்டிய சிரிப்புக்கிடமான நிகழ்ச்சிகள் சிந்தனைக்கும் விருந்தளிக்கின்றன. வாழ்வைப் பார்த்து - வாழ்க்கையைப் பார்த்துச் சிந்தித்த வள்ளுவப் பெருந்தகை ஒரு தத்துவக் குயில். அவரொரு நிகழ்ச்சியை நமக்குக் காட்டி நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்வதைப் பாருங்கள்.

ஒரு கடைவீதியிலே ஒருவன் நடந்து சென்று கொண்டிருக்கிறான். தேநீர்கடை ஒன்று குறுக்கிடுகிறது. வைத்திருந்த பணத்துக்கு ஏதோ பலகாரம் வாங்குகிறான்.