பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

436

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பெருமானை எண்ணியபடி எவர்க்கும் இன்னல் களைபவர்கள்; மன்றத்து மக்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கவே தாங்கள் பிறந்திருப்பதாக எண்ணிச் செயல்பட்டவர்கள். இறைவனின் திருவடிகளே செல்வம் எண்றெண்ணி வாழ்ந்தவர்கள். கேடும் ஆக்கமும் கெட்ட திருவினால் அவர்கள் நன்மையையும் தீமையும் ஒன்றாகவே-ஒரே தன்மை உடையனவாகவே கருதினார்கள்; ஓட்டையும் செம்பொன்னையும் ஒக்கவே நோக்கினார்கள்; வீடும் வேண்டாது, கூடும் அன்பினிற் கும்பிடுதலாகிய ஒரு செயல் கிடைத்தால் போதுமானது என்று அவர்களது நெஞ்சங்கள் ஏங்கின! ஆனந்த நடனமாடும் ஆண்டவனது குனித்த புருவத்தையும் பனித்த சடையையும் பவளமேனியையும் அம்மேனியில் திருநீறு அணிந்த காட்சியையும் பாதம் தூக்கி ஆடும் அற்புத அழகையும் காணவே-மானிடப் பிறவியும் வேண்டுவதே இந்த மானிலத்தே என்றார்கள். இறைவனை எட்டத்தில் வைத்து ஏதோ வாழ்வோடு பிணைப்பில்லாத வாழ்த்துப் பொருளாக்கிக் கோவில்களிலும் குருக்கள்மாரின் சமீபத்திலும்தான் கடவுளை வணங்க வேண்டுமென்று கருதுகிற சமுதாயத்துக்கு நல்லதொரு விருப்புணர்வை நமது நாயன்மார்கள் கொடுக்கிறார்கள். பொன்னும் மெய்ப்பொருளும் தந்து போகமும் திருவும் புணர்ப்பவராக நமது கடவுள் இருக்கிறார் என்ற எண்ணம் நம்மவர்களிடையே தோன்ற மன்றுளார் அடியார் பாடுபட்டுழைத்தார்கள். அவர்களது வாழ்க்கை முறையிலேயே-தொண்டு தெய்வத் தன்மை வாய்ந்தது என்றும்-தொண்டலாது உயிர்க்கு ஊதியம் இல்லை என்றும் நாம் அறியக்கூடியவையாயிருக்கின்றன.

தமிழர் வாழ்வு இசையோடு இணைந்தது. ஏழிசையாக அவ்விசைகளின் பயனாக இறைவனைக் கண்டவர்கள் தமிழர்கள். இயற்கையை வருணித்து அதன்வழி ஆண்டவனைக் கண்டு வணங்கிய இனமும் தமிழினந்தான். இத்தகைய தமிழ் நிலை சமணர்களது குறுக்கீட்டால் பிறழக்