பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமது நிலையில் சமயம் சமுதாயம்

69


மன்னியஇத் தமிழ்க்கிளவி மந்திரங்கள் கணித்தடியேன்
செந்நெறியின் வழுவாஇத் திருக்காஞ்சி நகர்வரைப்பின்
உன்னணுக்க னாகிஇனி துறைந்திடவும் பெறவேண்டும்
இன்னவரம் எனக்கருளாய் எம்பெருமான் என்றிரந்தான்[1]

என்பது காஞ்சிப்புராணப் பாடல்.

... எனதுரை தனதுரையாக
நீறணிந்தேறுகந் தேறிய நிமலன் ...

என்பது திருஞானசம்பந்தர் வாக்கு திருமுறைப் பாடல்கள் ஆற்றல் மிக்க மந்திரங்களாக ஐந்தொழில்களையும் நிகழ்த்தியுள்ளன.

உரிமைபெற உழைப்போம்!

ஆதலால், தமிழில் வழிபாடு என்பது வரலாற்றடிப் படையிலும் நியாயமானது; உளவியலடிப்படையிலும் நியாயமானது. மரபு வழியிலும் அது நமது பிறப்புரிமை. நமது திருக்கோயில்களில் தமிழில் வழிபாடு நிகழ்த்தும் முயற்சிக்கு நமது தமிழக அரசு அளித்துவரும் ஆதரவு பாராட்டுதலுக்குரியது. ஆனால், அரசு முறையில் இயக்கப்படும்பொழுது தமிழ் வழிபாட்டுமுறையை விரும்பாதார் வழக்கு மன்றங்களுக்குச் செல்லலாம். அதனால் தடைகள் ஏற்படலாம். ஆனால், தமிழ் மக்கள் தங்களுடைய உயிரினுமினிய திருமுறைகளால் வழிபாடு நிகழ்த்த வேண்டும் அருச்சனை செய்யவேண்டுமென்று கிளர்ந்தெழுவதே தமிழ் வழிபாட்டினைப் பெற ஒரே வழி. நமது மக்கள் உயிரனைய பிரச்சினைகளில் அலட்சியம் காட்டுகிறார்கள். “ஏனோ தானோ” என்று வாழ்கிறார்கள். இந்த அவலநிலையை மாற்றியமைக்கத் தமிழறிஞர்கள் ஓயாது உழைத்திடுதல் வேண்டும்.

  1. காஞ்சிப்புராணம், தழுவக், 245,