பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இதயம் படைத்த மாமனிதர் ஆல்பர்ட் சுவைட்சர், “திருக்குறளுக்கு ஒப்பான நீதி நூல் எதுவுமில்லை” என்று புகழ்ந்துள்ளார். திருக்குறள் கற்பனையில் தோன்றியதன்று. திருக்குறளில் அதிசயம் கிடையாது; அற்புதம் கிடையாது; புனைந்துரையில்லை. மனித உலகத்தை வாழ்வாங்கு வாழ வழிகாட்டும் நூல். “இது” என்றும் “அது” என்றும் இரண்டாட்டுகின்ற சமயக் கணக்கர் வழியினின்றும் விலகிய பொது நூல். ஓருலகம் படைக்க வேண்டுமானால் அதற்குரிய நூல் திருக்குறளேயாம். திருக்குறள் நெறி, வையகத்தில் வாழ்க்கையாக மலருமானால், வீட்டுக்கு வீடு இடையில் இருக்கும் சுவர்கள் இடிபடும். நாட்டுக்கு நாடு இடையில் உள்ள எல்லைக் கோடுகள் மறையும். உலகம் ஒன்றாகும். மானிடச் சாதி ஒரு சாதியாக உருவெடுக்கும். எங்கும் பொதுமை நிலவும்! எல்லோரும் வாழ்வர்; இத்தகு பெரு நூலை- அரிய நூலைத் தந்த திருவள்ளுவர் திருவடிகளைப் போற்றுவோமாக அவர் காட்டிய வழி வாழ்வோமாக.

மறை நூல்

ஒரு சமுதாயத்தை வழிநடத்தி வாழ்விக்கும் சமய நெறிக்கு மறைநூல் வேண்டும். மறை என்பது தமிழ்ச் சொல். அதனையே வேதம் என்றும் கூறுவர். நமது சமயத்திற்கு எது மறை? இந்து சமயத்திற்கு எது மறை? மற்ற சமய நெறிகளுக்கு இருப்பதுபோல நமக்கென்று ஒரு மறை இல்லை; பலர் பலவிதமாகக் கூறுகின்றனர் என்ற குறை தொடர்ந்து இருக்கிறது. இந்த நிலைநோக்கி அறிஞர்களும் கவல்கின்றனர். மறை நூல் இல்லாது போனால் எங்ஙனம் சமுதாயத்தை ஒருமைப்பாடுடைய தாக்க முடியும்? என்பது அவர்கள் கவலை. ஆனால் உண்மையில் நமக்கொரு மறை இல்லாமலா போய்விட்டது? நமக்கென்று ஒரு மறை உண்டு. ஆனால், அதைத் துணிந்து மறை நூலாக ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றோம். தொல்காப்பியத்திலேயே மறை நூல் என்ற